மல்லுக்கட்டிய என்.ஐ.ஏ அதிகாரிகள்… விட்டுக்கொடுக்காத சைலேந்திர பாபு!

Published On:

| By christopher

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று (அக்டோபர் 23) அதிகாலை சுமார் 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. வெடித்த வேகத்தில் காரிலிருந்து சிதறிய பொருட்கள் ஈஸ்வரன் கோவில் முகப்பை சேதப்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர் காவல்துறை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முதற்கட்ட ஆய்வினை தொடங்கியபோதே, அங்கு சிதறிக்கிடந்த ஆணிகள், கோலிகுண்டுகள், சல்பர் ரசாயன சிதறல்கள் என தெரியவர, இது திட்டமிட்ட சதி செயல் என்பதற்கான அனைத்து முகாந்தரங்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

கோவைக்கு விரைந்த டிஜிபி!

உடனடியாக மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் பறந்தது. அவரும் சம்பவ இடத்திற்கு வந்து அனைத்தையும் உறுதி செய்த பின்பு, உடனடியாக சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

ADVERTISEMENT
DGP didnot accept NIA intervention on Kovai car blast

மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி ஹார்ட் டிஸ்க்களை போலீசார் அள்ளிச்சென்றனர்.

அதற்குள் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்து விடவே, காவல் துறை தலைவர் சைலேந்திர பாபுவுக்கு, மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் சென்னையிலிருந்து உடனடியாக கோவைக்கு பறந்து வந்தார்.

ADVERTISEMENT

அடையாளம் தெரிந்து அதிர்ச்சி!

இதற்குள் வெடித்து சிதறிய வண்டியின் பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அது ஒன்பது கைகள் மாறி, பத்தாவதாக உக்கடத்தை சேர்ந்த, உணவகம் நடத்தி வரும் ஒரு நபர் வாங்கியதை கண்டுபிடித்தனர். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட, அவருக்கு நெருக்கமான நபர்களை விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர்.

DGP didnot accept NIA intervention on Kovai car blast

இந்த விசாரணையில் தான் போலீசார் முதல் முதலாக ஜமேஷா முபீன் என்ற பெயரை கேட்கின்றனர். அவரின் முகவரிக்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் அதே வேளையில், இன்னொரு டீம் போலீசார், அப்பகுதிலிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போட்டுப்பார்த்தும், இரண்டும் ஒத்துப்போக, இது முபீனுடைய வேலை என தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கடந்த 2019ஆம் வருடம் முபீனை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்ற தகவலை கேட்டு போலீசாருக்கு தலை சுற்றாத குறை. இந்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு பாஸ் செய்த விசாரணை டீம், முபீனுடைய வீட்டை சல்லடை போட்டு சோதனை செய்து, வெடிமருந்து தயாரிப்பதற்கான மூல பொருட்களையும், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச்சென்றனர்.

உடனடியாக முபீனுடைய உறவினர்களை அவரது உடலை அடையாளம் கட்டுவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்று, அது முபீனுடைய உடல் தான் என உறுதிப்படுத்திக்கொண்டு, வாக்குமூலமும் வாங்கினர்.

உறுதியாக நின்ற டிஜிபி சைலேந்திரபாபு!

இதற்கிடையே, கோவையில் உள்ள மத்திய உளவுத்துறையின் ஐபி அதிகாரிகள், உள்துறைக்கு நடந்த சம்பவங்கள் குறித்து நோட் போட, அன்று மாலையே என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு பறந்து வந்தனர்.

மேலும் மாநில உள்துறைக்கு இந்த வழக்கின் விசாரணையை தாங்கள் எடுத்துக்கொள்ளப்போவதாக வாய்மொழி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, கிட்டத்தட்ட இந்த வழக்கின் அனைத்து முடிச்சுகளை அவிழ்த்து விட்டதாகவும், மேலும் பதுங்கியுள்ளவர்களை நெருங்கிவிட்டதாகவும், இவ்வழக்கை தமிழக போலீசார் முழுமையாக முடித்த பிறகு என்.ஐ.ஏ தனியாக வழக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

DGP didnot accept NIA intervention on Kovai car blast

இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என்.ஐ.ஏ வினர், பின்னர் வழக்கின் போக்கினை எடுத்து கூறியதும், சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் “நம் போலீசாரே திறம்பட இந்த வழக்கை புலன் விசாரணை செய்து வருவதாகவும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த 12 மணி நேரத்தில் அனைத்து விவரங்களையும் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு அவசியம் இல்லை” என்று தெரிவித்தார். பின்னர், இதில் திறம்பட பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலை தாக்குதலா?

இதற்கிடையே, என்.ஐ.ஏ அமைப்பினரும் தனியாக தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே 2019 ஆம்ஆண்டு முபீனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை வைத்தும், தற்போது முபீனுடன் தொடர்பில் இருந்த நபர்களின் செயல்பாடுகள் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தியுள்ளனர். மேலும், இது தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

DGP didnot accept NIA intervention on Kovai car blast

இது ஒருபுறம் இருக்க, முபீனுடன் அன்று இரவு வீட்டிலிருந்த இரண்டு நபர்களை பிடித்து தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வரும் காவல்துறையினர், இவர்களுக்கு வெடிமருந்து சப்ளை செய்தது யார் எனவும், இவர்கள் அமைப்பாக சேர்ந்து செயல்பட்டனரா அல்லது மேலும் வேறு ஏதாவது திட்டம் வைத்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

வினோத் அருளப்பன்

T20WorldCup 2022: 2 ஓவரில் 40 ரன்கள்… தெறிக்கவிட்ட டி காக்.. ஆனால் அத்தனையும் வீண்!

இங்கிலாந்தின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share