“மிரட்டல் வில்லன்” டேனியல் பாலாஜி காலமானார்!

Published On:

| By Selvam

தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) இரவு மாரடைப்பால் காலமானார்.

பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த டேனியல் பாலாஜி, கடந்த 2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

இவரது இயற்பெயர் பாலாஜி தான். சித்தி தொலைக்காட்சி தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் “டேனியல் பாலாஜி” என்று தமிழ் திரையுலகில் அறியப்பட்டார்.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி, அந்த படத்தின் வெற்றிக்கு பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் மிகவும் பிசியாக நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று (மார்ச் 29ஆம் தேதி) இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநரும் டேனியல் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான மோகன் ராஜா டேனியல் பாலாஜியின் மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

டேனியல் பாலாஜியின் மறைவிற்கு தமிழ் திரை துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூரியனோடு மோதும் தாமரை… பிந்தும் இரட்டை இலை…வேலூர் தொகுதி நிலவரம்!

ஒரு மேட்ச் பாக்க முடியுதா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share