சூரியனோடு மோதும் தாமரை… பிந்தும் இரட்டை இலை…வேலூர் தொகுதி நிலவரம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

14 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வேலூர் தொகுதியானது பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொகுதி.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரே தொகுதி வேலூர் தொகுதிதான்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனான சிட்டிங் எம்.பி கதிர் ஆனந்த் மீண்டும் இத்தொகுதியில் களமிறங்குகிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புதியநீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இந்த முறை பாஜக கூட்டணியில் களமிறங்குகிறார். அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி போட்டியிடுகிறார். அதிமுகவில் பெரிதாக எந்த பொறுப்பிலும் இல்லாதவர். அரசு மருத்துவமனையின் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதிமுகவில் களம் காண்கிறார் டாக்டர் பசுபதி. நாம் தமிழர் கட்சியின் சார்பாக மகேஷ் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இசுலாமியர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிகளில் இசுலாமியர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். எனவே சிறுபான்மையினரின் வாக்குகளை யார் பெறுகிறார்கள் என்பது இத்தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாக இருக்கிறது.

வேலூரின் பெருமை என்ன?

தமிழ்நாட்டிலேயே பழமையும் புதுமையும் கலந்து செய்த நகரம் வேலூர். இந்த தேர்தலை இரண்டாம் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின். இந்த வேலூரில்தான் முதல் சுதந்திரப் போருக்காக வித்திட்ட சிப்பாய் கலகம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்திய தமிழ்நாட்டு சிப்பாய்களால் நடத்தப்பட்டது. இதற்கான நினைவுத் தூணை கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் திறந்து வைத்தார். இப்படி தேசிய உணர்வுக்கான திறவுகோலாக இருப்பது வேலூர்.

பாலாற்றுப் படுகை விவசாயத்துக்கு மிகவும் புகழ்பெற்றது. ஆனால் சமீப காலங்களாக பாலாறு தமிழ்நாட்டைத் தொடும் முன்பே ஆந்திராவில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுவிட்டன. இதனால் பாலாற்றுப் பாசனமும் குடிநீர் வளமும் வேலூருக்கு சில பத்தாண்டுகளாகவே கிடைக்கவில்லை. பாலாற்றுப் பிரச்சினை காவேரி பிரச்சினை போல மாநிலம் தழுவிய அளவில் பேசப்படவில்லை என்பது இங்குள்ள பாலாற்று உரிமை மீட்பு குழுவினரின் மிகப்பெரிய வருத்தம்.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த தோல் தொழிற்சாலைகள் அமைந்து இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றன. குட்டி சிவகாசி என சொல்லும் அளவுக்கு குடியாத்தம் தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிலில் பிரசித்தி பெற்றுள்ளது. கைத்தறி ஜவுளிக்கும் குடியாத்தம் பெயர் பெற்றது. மருத்துவம், கல்வி இரண்டிலும் உலகப் புகழ் பெற்றது வேலூர்.

பெரியார் முதல் இப்போதைய அழகிரி மகன் துரை தயாநிதி வரை மிகப் பிரபலங்களில் இருந்து மிக மிக சாமானியர்கள் வரை சிகிச்சை பெறுவதற்கான மிகப்பெரும் மருத்துவ மையமாக திகழ்கிறது சி.எம்.சி மருத்துவமனை. வேலூரில் ஆங்கிலேய அதிகாரியான தனது தந்தையோடு குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த அவரது மகள் Ida Sophia Scudder கர்ப்பிணிப் பெண் சாலையில் கதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அது அவரது மனதில் ஆழமாகப் பதிய… லண்டன் சென்று டாக்டர் படித்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கே குறிப்பாக வேலூருக்கே 1890 ஆம் ஆண்டில் திரும்புகிறார். அதன்பின் 1902 இல் அவர் மகப்பேறு மருத்துவமனையாக தொடங்கிய மருத்துவமனைதான் இன்று ஆலமரமாய் நிற்கும் சிஎம்சி. இப்படி மனித நேயத்துக்கும் மருத்துவத் தொண்டுக்கும் அடையாளமாக இருப்பது வேலூர்.

அதேபோல உலக அளவில் உயர் தொழில் நுட்பக் கல்வியின் அடையாளமான விஐடி பல்கலைக்கழகமும் வேலூரின் பெருமையாக இருக்கிறது. சுமார் 30 நாடுகளின் கல்வி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கல்வியில் வெளிநாட்டு மாணவர்களும் இங்கே வந்து பயிலும் வகையில் சிறந்து விளங்குகிறது.
உலகத்தோடு இவ்வளவு தொடர்புகொண்ட வேலூருக்கு இன்னும் விமான நிலையம் வரவில்லையே என்பது இப்பகுதி மக்களின் பெரும் குறையாக இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகின்றன.

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தினன் குப்பம் (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இங்கு நான்கு முறை காங்கிரஸ் கட்சியும், நான்கு முறை திமுகவும், மூன்று முறை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், இரண்டு முறை அதிமுகவும், இரண்டு முறை பாமகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒருமுறை முஸ்லீம் லீக் வேட்பாளர் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். இத்தொகுதியில் 6 முறை முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக 11 கோடி ரூபாய் பணம் கண்டறியப்பட்டதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதத்தில் வேலூர் தொகுதிக்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 8148 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

தொடக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்த நிலையில், பின்னர் கதிர் ஆனந்தும், ஏ.சி.சண்முகமும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தனர். இறுதிவரை வேலூரில் யார் வெல்லப் போகிறார் என்பது இழுபறியாகவே இருந்து வந்தது. ஒருவழியாக கடைசியில் கதிர் ஆனந்த் சில ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வந்து வெற்றி பெற்றார். திமுகவின் வெற்றிக்கு இஸ்லாமியர்களின் வாக்கு பெருந்துணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

2019 பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கதிர் ஆனந்த் பெற்ற வாக்குகளின் விவரங்களை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சில மாற்றங்களை கவனிக்கலாம்.

• முதலில் வேலூர் சட்டமன்றத் தொகுதி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் கதிர் ஆனந்த் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தைக் காட்டிலும் 6,275 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 9,189 வாக்குகள் அதிகம் பெற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 3,000 வாக்குகள் மட்டும் திமுகவின் வாக்குகளில் அதிகரித்திருந்தது.

• இரண்டாவது அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி.2019 நாடாளுமன்றத் தேர்தலில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் கதிர் ஆனந்த் பின்னடைவை சந்தித்தார். இங்கு ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்தை விட 9539 வாக்குகள் அதிகம் பெற்றார்.2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் அதிமுக வேட்பாளரை விட 6360 வாக்குகள் அதிகம் பெற்றார். இங்கு இரண்டு ஆண்டுகளில் இங்கு திமுகவின் வாக்கு எண்ணிக்கை 16,000 அதிகரித்திருக்கிறது.

• மூன்றாவது கே.வி.குப்பம் (தனி) தொகுதி2019 இல் திமுகவை விட அதிமுக 8109 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது. அதேபோல் 2021 இலும் அதிமுக 10.582 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது.

• நான்காவது குடியாத்தம் (தனி) தொகுதி2019 இல் இங்கும் அதிமுகவே அதிக வாக்குகளைப் பெற்றது. ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்தை விட 12,291 வாக்குகள் அதிகம் பெற்றார். ஆனால் 2021 இல் திமுக 6901 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுகவை வீழ்த்தியது. இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 19,000 வாக்குகள் திமுக வாக்கு எண்ணிக்கையில் உயர்ந்திருக்கிறது.

• ஐந்தாவது வாணியம்பாடி தொகுதி2019 இல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுகவை விட 22,351 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 2021 இல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை விட 4904 வாக்குகள் அதிகம் பெற்றார். இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 27,000 வாக்குகள் திமுக கூட்டணியின் வாக்குகளில் சரிந்திருந்தது.

• ஆறாவதாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி2019 இல் அதிமுகவை விட 8603 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 இல் அதிமுகவை விட 20,232 வாக்குகள் அதிகம் பெற்றது. இத்தொகுதியில் திமுகவின் வாக்கு எண்ணிக்கை சுமார் 12,000 உயர்ந்திருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், 2 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. 2019-ல் திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் 8141 ஆக இருந்தது 2021 இல் சற்று அதிகரித்து 27,188 ஆக மாறியிருக்கிறது.

2019-லும் சரி, 2021-லும் சரி திமுக, அதிமுக இரண்டுமே கடுமையான போட்டியைத் தான் வேலூரில் சந்தித்திருக்கின்றன. எளிதான வெற்றி என்பது பெரிதாக எங்கும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

குறிப்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதில் மிகக்குறிப்பாக கதிர் ஆனந்த் வாணியம்பாடி தொகுதியில் பெற்ற வாக்குகளே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. வாணியம்பாடி இசுலாமியர்கள் அதிகம் வகிக்கும் பகுதி என்பதால், இதைவைத்து பார்க்கும்போது இசுலாமியர்களின் வாக்குகள் கதிர் ஆனந்தின் வெற்றிக்கு எவ்வளவு துணை நின்றிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி வாணியம்பாடி நகராட்சியின் மக்கள் தொகையில் 55% பேருக்கு மேல் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கதிர் ஆனந்தின் பாராளுமன்ற ரிப்போர்ட்டை பார்த்தோமென்றால் 5 தனி நபர் மசோதாக்களை கொண்டுவந்திருக்கிறார். 32 விவாதங்களில் பங்கெடுத்ததுடன் 262 கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் அவரது அட்டெண்டன்ஸ் 63%. Top Performing எம்.பியாக கதிர் ஆனந்த் இல்லையென்றாலும், அட்டெண்டன்ஸ் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது ஓரளவிற்கு தனது பாராளுமன்றக் கடமைகளை நிறைவேற்றியிருக்கிறார்.

5 ஆண்டுகள் எம்.பியாக இருந்த பின்பும் துரைமுருகனின் மகன் என்பதைத் தாண்டி தனக்கென தனி அடையாளத்தினை உருவாக்க முடியாதது கதிர் ஆனந்தின் மைனஸ். அதனால் இன்றுவரை ஒரு வாரிசாகவே தொகுதி மக்களால் அடையாளம் காணப்படுகிறார்.

ஆரம்பத்தில் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை மீண்டும் வேலூரில் நிறுத்துவதற்கு விரும்பவில்லை. ஏற்கனவே குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றதால், இந்த தொகுதியில் வெற்றி பெறுவது சற்று கடினமானதாக இருக்கும் என்று கிருஷ்ணகிரியில் சீட்டைப் பெறும் பிளானில் இருந்திருக்கிறார். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்து தனித்தனியாக நிற்பதென முடிவான பிறகுதான் கதிர் ஆனந்தை வேலூரிலேயே நிறுத்த முடிவெடுத்ததாக திமுக நிர்வாகிகள் வட்டத்தில் சொல்கிறார்கள்.

Image

திமுகவிலும் வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் துரைமுருகன் மகனுக்கு மீண்டும் சீட்டு கொடுக்கக் கூடாது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் கதிர் ஆனந்தை இங்கு நிறுத்தினால் தேர்தலில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் ஸ்டாலின் கதிர் ஆனந்திற்கே மீண்டும் வேலூர் தொகுதியை கொடுத்திருக்கிறார். வேலூர் மாவட்ட நிர்வாகிகளான நந்தகுமார், தேவராஜ் மற்றும் பலருக்கு ஸ்டாலினே நேரடியாக போன் செய்து, நமது பொதுச்செயலாளர் மகன் இங்கு நிற்கிறார், அவர் தோற்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் நிர்வாகிகள் தொகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி சண்முகம் இந்த முறை அதிமுக இல்லாமல் பாஜக கூட்டணியில் நிற்கிறார். அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை என்பது கதிர் ஆனந்திற்கு பிளஸ் ஆக மாறுகிறது. அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக வாக்குகளைப் பிரிக்கும் என்பதால் எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறார் கதிர் ஆனந்த்.

பாஜக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதி முழுதும் அறிந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பது அவருக்கு பெரிய ப்ளஸ். முதலியார் சமூகத்தினரின் வாக்குகள் வேலூர் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதும் அவரது மற்றொரு பலம். எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்தபோது அவருடைய தீவிர விசுவாசியாக அதிமுகவில் பயணித்தவர் ஏ.சி.சண்முகம். வேலூர் தொகுதி அவருக்கு புதிதல்ல. 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதற்கு முன்பே 1980 இல் ஆரணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஒதுங்கியிருந்த ஏ.சி.சண்முகம் முதலியார் பேரவை என்ற சாதி அமைப்பினை நடத்தி வந்தார். பின்னாட்களில் புதிய நீதிக்கட்சியை உருவாக்கினார். முதலியார் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் கட்சிகளை நாங்கள் ஆதரிப்போம் என்றும் அக்கட்சியின் மூலம் அறிவித்தார்.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பல கல்லூரிகளின் அதிபராகவும் இருப்பதால் தொகுதியில் தேர்தல் செலவுகளை தாராளமாக செய்யக் கூடியவர் என்பதும் ஏ.சி.சண்முகத்தின் ப்ளஸ்.

2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் மூன்றாவது அணியாக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்தார். அதன்பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியைத் தழுவினார்.

2014 இல் மோடி அலை என்று சொல்லப்பட்டதும், அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக பலமாக இருந்ததும், மதிமுக போன்ற கட்சிகளும் உடன் இருந்ததும் ஏ.சி.சண்முகத்திற்கு சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த ப்ளஸ் இல்லை. மேலும் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் விலைவாசி உயர்வு தமிழ்நாட்டில் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2019 தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது இல்லாதது ஏ.சி.சண்முகத்தின் மிகப்பெரிய மைனஸ். மேலும் இத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் இரட்டை இலை சின்னத்தில் பெற்ற வாக்குகள் என்பதால் அதே வாக்குகள் இப்போது கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அடுத்ததாக பாஜக சார்பில் போட்டியிடுவதால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைப்பது கடினம் என்பதும் இவரது இன்னொரு முக்கியமான மைனஸ்.

ஏ.சி.சண்முகத்தைப் பொறுத்தவரை அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தபோது வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதற்குப் பிறகு அவர் அங்கு போட்டியிடுவதற்கு தயாராக இல்லை. தான் போட்டியிடப்போவதில்லை என்பதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடமும் சில மாதங்களுக்கு முன்பே ஏ.சி.சண்முகம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் பாஜகவின் டெல்லி மேலிடம் தொடர்ந்து அவரிடம் தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்திய காரணத்தினால் ஒரு கட்டத்தில் போட்டியிட ஓகே சொல்லியிருக்கிறார்.

பாமக இணைந்தது பாஜக கூட்டணிக்கு வேலூர் தொகுதியில் ஒரு பலத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும், தனது தனிப்பட்ட செல்வாக்கை நம்பியும் களமிறங்குகிறார் ஏ.சி.சண்முகம். திமுகவின் மீதான அதிருப்தியை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கான வாக்குகளாக மாற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறார்.

அதிமுகவைப் பொறுத்தவரை கட்சியிலேயே பதவியில் இல்லாத ஒரு புதுமுகமான டாக்டர் பசுபதியை களமிறக்கியிருக்கிறது. இவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். எங்கள் கட்சியின் சார்பில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள் என்ற ஜெயலலிதாவின் ஃபார்முலாவையே எடப்பாடி பழனிசாமி இந்த முறை முயன்றிருப்பதாகத் தெரிகிறது. அதனால் தனது கட்சிக் கட்டமைப்பு பலம் ஒன்றை மட்டுமே நம்பி அதிமுக களமிறங்கியிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் முதலில் வேலூர் தொகுதியை SDPI கட்சிக்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. வேலூர் தொகுதி இசுலாமியர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் அவர்களின் பெரும்பான்மையான வாக்குகளை SDPI கட்சி மூலம் எளிதாகப் பெற முடியும் என்பது கணக்காக இருந்தது. ஏற்கனவே வேலூரில் இசுலாமியர்களின் வாக்குகளால் தான் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் என்பதால் அதற்கும் செக் வைக்க முடியும் என்று அதிமுக நினைத்தது. ஆனால் இறுதியில் தொகுதி எஸ்.டி.பி.ஐ-க்கு வழங்கப்படாமல் அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒரு புதுமுகத்திற்கு ஒதுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணிக்கும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு நல்ல understanding இருப்பதாக அரசல் புரசலாக பேச்சுகள் அடிபட்டு வந்த சூழலில், வேலூர் தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்படாதது பல சலசலப்புகளை எழுப்பியிருக்கிறது. இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, வேலூர் தொகுதியை மையப்படுத்தி திமுக, அதிமுக நிர்வாகிகள் சிலரிடையே மறைமுக ஒப்பந்தம் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27,000 வாக்குகளைப் பெற்றிருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் வேலூரின் 6 சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து அது 60,000 ஆக அதிகரித்தது. வாக்குகள் இருமடங்கு உயர்ந்ததால், இந்த முறை இன்னும் கூடுதலான வாக்குகளைப் பெற முடியும் என்று களமிறங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த்.

வேலூரில் திமுக – அதிமுக – பாஜக இடையே மும்முனைப் போட்டி என்று சொல்லப்பட்டாலும், திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையில் தான் கடுமையான போட்டி இருக்கும் என்றும், அதிமுக மூன்றாவது இடம் செல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் சொல்கிறது தொகுதி ரிப்போர்ட். தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டியா, திமுகவுக்கும் பாஜகவுக்கும் போட்டியா என்று காரசார விவாதங்கள் அதிமுக மற்றும் பாஜகவினருக்கு இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், திமுக பாஜக இடையிலான போட்டியாக வேலூர் தொகுதி மாறியிருப்பதாகவே அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவேகானந்தன்

”பாஜக ஆட்சியில் 90% வழக்குகள் எதிர் கட்சியினர் மீது தான்” : கனிமொழி குற்றச்சாட்டு!

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *