மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த திருமாவளவன் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு தமிழகத்தின் மூத்த கல்வியாளர் வசந்தி தேவியை அறிவித்தார். முன்னதாக, ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக திருமாவளவனே களமிறங்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. இது குறித்து அவரிடம் கேட்ட போது அதை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. வேட்பாளார் பட்டியல் வெளியாகும் போது தெரியும் என்று மட்டும் சொன்னார்.
ஆனால் இப்போது வசந்திதேவியை மக்கள் நலக்கூட்டணியின் பொதுவேட்பாளர் என்று கூறி நிறுத்தி உள்ளார்.
வசந்திதேவி எப்படி வேட்பாளர் ஆனார்?
ஜெயலலிதா போட்டியிடுவதால் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக ஆர்.கே நகர் மாறிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் அங்கு போட்டியிட்டால் தலித் கட்சி என்ற முத்திரையையும் கடந்து பொதுச் சமூகத்தில் ஒரு கவனம் கிடைக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் அலசப்பட்ட பின்னர்தான் ஆர்.கே நகரைக் கேட்டுப் பெற்றார் திருமா. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக திருமா போட்டியிட்டிருந்தால் அவர்கள் போட்டியிடும் 25 தொகுதிகளிலும் அதிமுகவினர் விடுதலைச் சிறுத்தைகளைத் தோல்வியடையச் செய்ய திவீரம் காட்டுவார்கள். ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத சூழல் உருவாகிவிடும் என்று அந்த பேச்சை பேச்சாகவே மறந்துவிட்டனர்.
‘சரி யார் ஆர்.கே நகரில் போட்டியிடலாம்’ என்று யோசித்து பரிசீலித்தபோது தான் பெண் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று கல்வியாளர் வசந்திதேவியை தேர்ந்தெடுத்தனர். அவர் அதிமுக ஆட்சியில் மகளிர் ஆணைய தலைவராக இருந்தவர். முன்னாள் துணை வேந்தர். திருமாவளவனுக்கு நெருங்கிய தோழர். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்றவர் என்கிற அளவில் வசந்திதேவியை தெரிவு செய்து செய்து முதலில் ஜி.ராமகிருஷ்ணனிடம் தகவலை தெரிவித்தார். அதன் பின் கூட்டணி கட்சியினரிடம் கூறினார். ‘நாம் பொது வேட்பாளராகவே இவரை நிறுத்தலாம்’ என்றனர் கூட்டணி கட்சியினர். அதன் பின்பே வசந்திதேவிக்கு தகவல் சொன்னோம்’ என்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். இப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக மென்மையான ஒரு வேட்பாளரையும் நிறுத்தியாகி விட்டது, முற்போக்கு குழுக்களின் ஆதரவையும் பெற்றாகி விட்டது என்ற குஷியில்
மூன்று நாட்களில் தீவிர பிரச்சாரத்தை இங்கே தொடங்க உள்ளார்கள்.









