சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கையா?

By Balaji

|

Published on 10 Feb 2018, 12:00 AM

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பலரும் நிதி வழங்கிவரும் நிலையில், சென்னை ஐஐடியில் சமஸ்கிருத மொழி குறித்து ஆய்வு செய்வதற்கு விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கப்படவுள்ளது. ஏறத்தாழ 40 கோடி ரூபாய் செலவில் தமிழ் இருக்கை அமையவுள்ளது. இந்த இருக்கைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

சென்னை ஐஐடியில் அமைக்கப்பட உள்ள சமஸ்கிருத இருக்கையானது மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளின் கீழ் செயல்படவிருக்கிறது. இந்த இருக்கையானது வேத காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டையும், அதில் சமஸ்கிருத மொழியின் தாக்கம் குறித்தும் ஆராய்ச்சி செய்யவிருக்கிறது.

சமஸ்கிருத இருக்கை அமைவதற்காக, சென்னை ஐஐடியில் பயின்ற முன்னாள் மாணவர்களான ராஜேந்தர் சிங் மகாராஜ், சவான் கிரிபால் ரூஹானி இருவரும் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். இதில், மகாராஜ் சிங் மட்டும் 90 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளார். இவர் வழங்கும் தொகையில் 75 லட்ச ரூபாயை, சமஸ்கிருதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

சமஸ்கிருத இருக்கையின் தலைவராக ஸ்ரீ அரபிந்தோ இந்திய கலாச்சார மையத்தின் இயக்குனர் சம்பந்தனந்தா மிஸ்ரா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பேசுகையில், சமஸ்கிருதம் என்பது வேத மொழி. அது இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது. ஐஐடியில் உள்ள மாணவர்கள் மத்தியில் இந்த மொழியை எடுத்து செல்வேன்” என்றார்.

தொடர்ந்து பேசும்போது, “இந்த மாதத்துக்குள் நான் பதவியேற்பேன். புராதன காலத்தில் இந்திய ரிஷிகளும் முனிவர்களும் எவ்வாறு அறிவியலுக்கு உதவினார்கள் என்பதை அவர்களுக்குக் காட்டுவேன், அறிவியல் வளர்ச்சிக்கு சமஸ்கிருத எவ்வாறு பங்களித்தது என்பது பற்றி புதிய படிப்பை உருவாக்க இருக்கிறேன், பண்டைய இந்தியாவில் சமஸ்கிருதம் மூலம் விஞ்ஞானிகள் செய்திருக்கும் சாதனைகள் குறித்து பாடத்திட்டத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். அறிவியலும், சமஸ்கிருதமும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சென்னை ஐஐடியின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, “சமஸ்கிருத இருக்கைக்கு நிதி வழங்குபவர்கள், யாரை இருக்கைக்கு தலைவராக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மட்டுமே வழங்க இயலும். ஆனால், இறுதி முடிவை நிர்வாகம்தான் எடுக்கும்” என்று கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கை அமைப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில், “நமது அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் (பிரிவுகள் 344(1), 351 ஆகியவற்றின்படி) இடம்பெற்றுள்ள மொழிகள் எதுவும் தேசிய மொழி என்ற தனித்தகுதி பெற்று பிரகடனப்படுத்தாமல், பொதுவில் மொழிகள் மொத்தம் 22 ஆகும். இந்த 22 மொழிகளில் அகர வரிசையில் சமஸ்கிருதம் 17ஆவது இடத்தில் உள்ளது. இந்த 22 மொழிகளில் உலக நாடுகள் பலவற்றிலும் பேசும் எழுதப்படும் மொழி உயிர்ப்புள்ள செம்மொழியான தமிழ் மொழியேயாகும். இந்த அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் வெகுக்குறைந்த எண்ணிக்கையில் உள்ளோர் பேசும், எழுதும் மொழி சமஸ்கிருதம்தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில், “ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக ஆரிய மொழி ஆதிக்கத் திணிப்பை மறைமுகமாக இப்படி நடத்துவதா?” என்றும், “அரசு பணத்தில் நடத்தும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி பெற்ற ஐஐடியில் இப்படி ஓர் ஆரிய ஆதிக்க ஊடுருவலைத் திட்டமிட்டே செய்கின்றனர். செம்மொழியான தமிழ்மொழியைப் புறந்தள்ளி, செத்தமொழிக்குச் சிம்மாசனமா?” என்றும் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

“முதலில் செம்மொழி தமிழுக்கு அரசே முன்வந்து இருக்கை அமைக்கட்டும். 22 மொழிகளில் எங்கெங்கு ஐஐடிக்கள் உள்ளனவோ அங்கங்கு அந்தந்த மொழி இருக்கைகளை ஏற்படுத்தி, அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம அந்தஸ்து வழங்க முன்வர வேண்டும்” என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel