அரசு விழா மரபில் தமிழ்தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்.
“வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.
இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்
இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தாற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.”என கூறப்பட்டுள்ளது.
