தமிழ்த் தாயைப் பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா? – விஜய்க்கு திமுக கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தாயைப் பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா என விஜய்க்கு திமுக கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தின் 13வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவருக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுவாக தமிழ்நாடு அரசு விழாக்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள் மீறப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபாக இருந்து வந்தது.

ADVERTISEMENT

ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதன் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது. இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் அளிக்கும் மரபைப் பின்பற்றாமல் பின்னுக்குத் தள்ளியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் இதுவரை வழக்கமான மரபே பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக வந்தே மாதரம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.முதல் நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது “இதுதான் மாற்றமா?” என பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து திமுக இணையப் பிரிவு வெளியிட்ட கண்டனப் பதிவில், “தமிழ்த் தாயைப் பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா? தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share