தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் ஆதரவளிக்க இருக்கின்றன.
சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைப் பெற்றுள்ளது விஜய்யின் தவெக. அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க கூடுதலாக 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
இதனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 5, இடதுசாரிகளுக்கு 4, விசிகவுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க முடியும்.
இதனால் காங்கிரஸ் ஆதரவை விஜய் கோரியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் நேற்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தின் முடிவின்படி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழு இன்று கூடி முடிவை அறிவிக்க இருக்கிறது.
இதே போல ஆட்சி அமைக்க ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக கடிதம் அனுப்பி உள்ளது. இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
”தங்களது கட்சி முன்மொழிந்த கூட்டணி ஆட்சியையே தமிழக மக்கள் வழிமொழிந்துள்ளனர்; சட்டசபை தேர்தலில் கூட தவெகவை தாங்கள் விமர்சிக்கவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.
தற்போதைய நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக அனைத்தும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் நிலைமை உள்ளது.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, விஜய் தலைமையிலான ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தர இருக்கிறது. அதேபோல விசிகவும் ஆதரவு தருகிறது. விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்களும் விசிகவுக்கு 1 அமைச்சர் பதவியும் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரி கட்சிகளின் 4 எம்.எல்.ஏக்களும் விஜய் அரசுக்கு வெளியில் இருந்து ‘குறைந்தபட்ச செயல் திட்டத்துடன்’ ஆதரவு தர உள்ளனர்” என்றனர்.
