2 அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இந்தியா முழுவதும் காங்கிரசை மூட முடிவா? – திமுக

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

தவெகவிற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் 2 அமைச்சர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு நாடு முழுவதும் காங்கிரஸை ஊத்தி மூட முடிவு செய்து விட்டீர்களா? என திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தவெக கட்சி ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு கொடுப்போம் என்று நேற்று முடிவு செய்திருக்கிறார்கள். இது திமுகவின் முதுகில் குத்தியது அல்ல; தமிழ்நாடு மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது. அதேபோல், ஓட்டு போட்ட மக்களின் முதுகில் காங்கிரஸ் குத்தியிருக்கிறது. எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை.

தவெக ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸிடம் இருப்பது 5 எம்எல்ஏக்கள். அதிமுகவில் இருந்து “நாங்கள் ஆதரிக்கத் தயாராக உள்ளோம்” என்று சொல்கிறார்கள்.
பாஜக எல்லோரும் விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்கிறது.

ADVERTISEMENT

அப்படியென்றால், இந்த முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? சிலரது ஈகோவை சாந்தப்படுத்த எடுக்கப்பட்ட முடிவா, அல்லது தலைமையில் எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுகிறது. இதை காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவு என்றால், அதை அவர்களே அறிவித்திருக்கலாமே. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் இதை முடிவு என்று சொல்கிறார்கள். இப்படித்தான் எல்லா முடிவுகளையும் காங்கிரஸ் எடுத்துக் கொண்டிருக்கிறதா?

இதைவிட முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த முடிவு இந்தியா முழுவதும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் மிக மிக முக்கியம். இப்போது காங்கிரஸை நம்ப முடியாது என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள். அடுத்து வரும் உத்தரப் பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவ் எப்படி காங்கிரஸை நம்பி தைரியமாகக் களத்தில் குதிப்பார்? இதை காங்கிரஸ் தலைமை தைரியமாக சொல்ல அச்சப்படுகிறது. அதனால் தான் “இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை, மாநில காங்கிரஸ் கமிட்டி எடுத்துள்ளது” என்று கூறுகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால் தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். தவெக மீது உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால், 2029 வரை கூட இருப்பார்கள். அவர்கள்தான் எங்கள் எதிர்காலம் என்றால் தைரியமாக தலைமையிலிருந்து அறிவித்திருக்க வேண்டியதுதானே? ஆனால் உங்களுக்கு எதற்கு அச்சம் என்று கேள்வி எழுகிறது.

இப்போது திமுகவுக்கு காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களை வைத்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. திமுகவுக்கு இதனால் லாபமோ நட்டமோ இல்லை. ஏற்கெனவே தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளோம். இரண்டு அமைச்சர் பதவிக்காக ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸை ஊத்தி மூடும் முடிவை எடுத்து விட்டீர்களா? இதை யோசிக்காமல், அவசரமாக கந்தரகோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு. பெரிய பாதிப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தும். ஐந்து எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு தமிழக அமைச்சரவையில் இரண்டு இடங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். இதை தமிழ்நாட்டு மக்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share