தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழல் நிலவுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் 28 தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தவெகவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, செல்வப் பெருந்தகை, கிரிஸ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர், தவெக தலைவர் விஜயை தற்போது நேரில் சந்தித்துள்ளனர்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யிடம் அளித்துள்ளனர். இதன் மூலம் தவெகவின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.
ஆளுநர் அர்லேகர் இன்று சென்னை வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன் பிற்பகல் 3 மணியளவில் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
