இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேருவின் 60வது நினைவு தினம் இன்று (மே 27) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் மற்றும் பல நிர்வாகிகள் நேருவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், “இந்தியாவை செல்வ செழிப்புள்ள, தொழில் பெருக்கம் உள்ள நாடாக மாற்றியவர் ஜவஹர்லால் நேரு. பல்வேறு அணைக்கட்டுகளை இந்திய நாடு முழுவதும் கட்டி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவியர் நேரு.
இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிக்கு ஆரம்பமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. தமிழகத்திற்கு பல தொழிற்சாலைகளை ஜவஹர்லால் நேரு உருவாக்கி தந்தார்.
உலக நாடுகளிடம் இருந்து கோதுமை, மைதா, பால் பவுடர்களை இறக்குமதி செய்த காலத்தில் இந்தியாவை உணவுத்துறையில் தன்னிறைவு உள்ள நாடாக மாற்ற “பசுமை புரட்சி”-யை கொண்டுவந்தார்.
இந்தியாவில் காங்கிரஸ் உள்ளவரை மட்டுமின்றி மக்கள் உள்ளவரை ஜவஹர்லால் நேருவின் புகழ் நிலைத்திருக்கும்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரமாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி மத்திய அரசு நடுநிலைத்தன்மையுடன் இருந்து செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் அனுமதியின்றி அணைகள் கட்டப்பட்டால் அதனை உடனே தடுக்க உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
இந்தியா கூட்டணியில் உள்ளதால் கேரள அரசிடமும், கர்நாடக அரசிடமும் வலியுறுத்தப்படாமல் இல்லை. தமிழக அரசு தொடர்ந்து இரு மாநில முதல்வர்களிடமும் வலியுறுத்திதான் வருகிறது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது, இதற்கு முன்பு பாஜகதான் இருந்தது. ஆனால் அப்போதும் இதே நிலைதான் தொடர்ந்தது. எனவே, மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி பார்த்தால், இன்னும் சில நாட்கள்தான் மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும். ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு புதிய அணை கட்டுவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று அண்ணாமலை கூறியது பற்றி கேட்டதற்கு,
“என்னை பொறுத்தவரை ஜெயலலிதா ஒரு ஆன்மீகவாதி. அவருக்கு தெய்வ பக்தி உண்டு. அதிகமாக தெய்வங்களை வழிபடுபவர்தான். ஆனால், ஜெயலலிதா மதவெறி பிடித்தவர் அல்ல. அவருக்கு தெய்வத்தின் மீது நம்பிக்கை இருந்தது. அதற்காக அவரை மதவெறி பிடித்தவர் என்று சொல்லிவிட முடியாது.
எம்.ஜி.ஆர். கூட தெய்வ நம்பிக்கை உடையவர் தான். அண்ணா “ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்” என்றுதான் சொன்னார். அதையேதான், கலைஞரும் சொன்னார்.
அதனால், தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் மதவாதிகள் என்றோ, மதவெறி பிடித்தவர்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆன்மீக நம்பிக்கை என்பது வேறு, மதவெறி என்பது வேறு” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிய அண்ணாமலை
துணைவேந்தர்கள் மாநாடு நடத்தும் ஆளுநர்… உயர்க் கல்வி சாதனை பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!