இந்திய ரயில்வே நிர்வாகம், ஆட்குறைப்பு நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுவது மட்டுமல்லாமல், தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்திய ரயில்வே நிர்வாகம், ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு சதவீதத்தைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் மொத்தம் உள்ள 14,80,455 பணியாளர்களில் சுமார் 29,608 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவரப்படி 1,906 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆட்குறைப்பு செய்திகள் ரயில்வே, பணியாளர்களிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்திய ரயில்வேயில் இரண்டு விழுக்காடு பணியாளர்களை, அதாவது மொத்தப் பணியிடங்களில் 29,608 பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் தெற்கு ரயில்வேயில் மட்டும் ஏறத்தாழ 2,000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.இது ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். விபத்துகளைத் தடுக்க உதவாது.இந்தியாவில் நாள்தோறும் 13,017 ரயில்கள் உட்பட தினசரி 22,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, நிரந்தர அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாகப் பணிக்குறைப்பு செய்வது சரியல்ல.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய மத்திய பாஜக அரசு, தற்போது ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதும், வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்டுவதும் அளித்த வாக்குறுதிக்கு நேரெதிரானதாகும்.
இன்று இந்தியா எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை வேலையில்லாத் திண்டாட்டமாகும். இது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விரக்தியையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது.வேலையில்லாத் திண்டாட்டத்தால் மது, போதைப் பழக்கம், கொலை, கொள்ளை, தற்கொலைகள், வன்முறைகள் உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளன.
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதில் கவனம் செலுத்தாத மத்திய பாஜக அரசு, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது நாட்டின் இளைய தலைமுறையினரின் நலனுக்கும், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கும் எதிரானதாகும்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுவது மட்டுமல்லாமல், தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். ரயில்வேயை படிப்படியாகத் தனியார்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
