கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மே மாதம் 21ஆம் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் சிறுமியை தேடிய பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பெயரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பிரேத பரிசோதனை செய்த போது சிறுமி பலாத்காரம் செய்து, கழுத்தை இறுக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சிறுமி கொலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக், அவரது நண்பர் மோகன் ராஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அதில் கார்த்தி சாக்லேட் வாங்கித் தருவதாக சிறுமியை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், அதற்கு அவரது நண்பரான மோகன் ராஜ் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. வழக்கில் 21 நாட்களில் 819 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். 68 பேரிடம் விரிவான சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அறிவியல்பூர்வ தடயங்கள், பிரேதப் பரிசோதனை உள்ளிட்டவற்றின் சான்றிதழ்கள் கொண்ட 221 முக்கிய ஆவணங்கள் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹரிஹரன் இந்த வழக்கில் கடந்த 16 ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று முதலில் அறிவித்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி, மோகன் ஆகிய இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதன் பிறகு தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையொட்டி கோவை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மோகன், “கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான்தான். அவரை எனது நண்பர் என்று கூறாதீர்கள். நண்பர் என்று குறிப்பிடுவது தவறு. கார்த்தி எனது வீட்டுப் பெண்களுடன் தொடர்பில் இருந்தார். எனக்கு நீதி வேண்டும் என்பதற்காகவே நான் போராடி வருகிறேன்.
என் மீது எந்தக் குற்றமும் இல்லை. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இதனை நீதிபதியிடமும் தெரிவிக்க உள்ளேன். செய்தியாளர்களாகிய நீங்களும் நீதிக்காகப் போராடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று பிற்பகலில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் இருவரின் பின்புலம் மற்றும் நடத்தை விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சமூக நலத்துறை மற்றும் சிறை துறையிடம் இருந்து ஒரு விரிவான அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் அந்த அறிக்கையின் அடிப்படையில் வரும் டிசம்பர் 4ம் தேதி குற்றவாளிகள் இருவருக்கும் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.








