முதல்வர் விஜய் தனது கடைசி படத்தை மீண்டும் நாளை பார்க்கவுள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று முதல் நாள் காட்சியை அமைச்சர்கள் என்.ஆனந்த், விக்னேஷ், முகமது பர்வேஸ் என பலரும் பார்த்தனர். இதுவரை விஜய்யின் ரசிகர்களாக இருந்த இவர்கள், ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் என்பதால் கண்ணீர் விட்டு அழுதனர். இது தமிழக அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஆளும் கட்சியினர் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதா என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் முதல்வர் விஜய் மீண்டும் நாளை (ஜூலை 25) தான் நடித்த ஜனநாயகன் படத்தை பார்க்கவுள்ளார்.
நாளை காலை 11.30 மணிக்கு வடபழனியில் உள்ள கியூப் திரையரங்கில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து படத்தைப் பார்க்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கிடையே படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக அடையாறில் உள்ள தாகூர் பிலிம் சிட்டியில் தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் தன்னுடைய கடைசி படத்தை பார்த்து ரசித்தார்.
தொடர்ந்து நேற்றும், இன்றும் அவர் தலைமை செயலகத்துக்கு வரவில்லை.
இன்று நடைபெறவிருந்த சுகாதாரம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் ஆய்வுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
