வெற்றி பயண திட்டம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று, ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்து வைத்தது. இத்திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசுப் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணித்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தவெக ஆட்சி அமைந்தால் மகளிர் பயணத் திட்டம் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டசபையில் 110-விதியின் கீழ், “மகளிர் கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்” என முதல்வர் விஜய் அறிவித்தார்.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது என்றும், ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இதர போக்குவரத்துச் சேவைகளிலும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

திட்டத்தின் விரிவாக்க விவரம்:

சாதாரண நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மட்டும் நிலுவையில் இருந்த இலவசப் பயணம் தற்போது பின்வரும் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது:

எக்ஸ்பிரஸ் பேருந்துகள்

எல்.எஸ்.எஸ் (LSS – Limited Stop Service) பேருந்துகள்

டீலக்ஸ் பேருந்துகள்

மோஃபசில் சாதாரணப் பேருந்துகள் (மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து)

40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி கட் சாதாரணப் பேருந்துகள்

இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.

டிக்கெட் கொடுத்த முதல்வர்

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் 76B பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முதலமைச்சர் விஜய் டிக்கெட் கொடுத்தார். அப்போது பெண்கள் முதல்வருக்கு கைகொடுத்தும், சாக்லேட்டு கொடுத்தும் மகிழ்ந்தனர். பெண்களிடம் பெற்ற சாக்லேட்களை முதல்வர் தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share