துபாய் விமானத்தில் கத்திக்குத்துக்கு ஆளான நிலையில் 174 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் (Smit Machchhar), கூடுதல் சிகிச்சைக்காக அபுதாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு நேற்று (செப்டம்பர் 30) ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாரை அவருடன் இருந்த துணை விமானி சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 14 ஆயிரம் அடி கீழே இறங்கியது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர்.
அதே நேரத்தில் காயமடைந்த நிலையிலும் ஸ்மித் மச்சார், விமானிகள் அறையின் கதவை திறந்தார். இதையடுத்து பயணிகளும் விமான ஊழியர்களும் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய சக விமானியை மடக்கிப் பிடித்தனர்.
அதே விமானத்தில் கூடுதலாக பயணம் செய்த 2 விமானிகள் அதன் பின் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரை இறக்கினர். விமானத்தில் பயணித்த 174 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தமது உயிரையும் பொருட்படுத்தாமல் கத்தி குத்து காயமடைந்த நிலையிலும் 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் தீர செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.
மேலும் படுகாயமடைந்த ஸ்மித் மச்சாருக்கு முதலில் சவுதி அரேபியாவின் தபூக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கூடுதல் சிகிச்சைக்காக இன்று (அக்டோபர் 1) அவர் விமானம் மூலம் அபுதாபிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்மித் மச்சாரை சந்தித்தார். ஸ்மித் மச்சாருக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
