தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் தகுதியுள்ள இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை: இந்தியத் தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக, ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி’ (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம்/முதல்முறையாகத் தகுதிபெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
‘படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள ‘உறுதிமொழிப் படிவம்’ (Declaration Form), சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
சிறப்புத் தீவிரத் திருத்தம் அல்லாத காலகட்டங்களில், ‘வாக்காளர் பதிவு விதிகள் 1960’-ன் படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.
இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களுடனும் இன்று (01.10.2026) காணொளி வாயிலாக கூட்டம் நடத்தப்பட்டது. ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
