சிறப்பு டெட் தேர்வு ரிசல்ட் : தடையை நீக்கிய உயர் நீதிமன்றம்!

Published On:

| By Kavi

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் கடந்த ஜூலை மாதம் சிறப்பு டெக் தேர்வு நடத்தப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்திற்கும் ஒரு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், செல்வன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில், ஆசிரியர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டி உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மும்மினேனி சுதீர் குமார், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். 

சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்த நீதிபதி, பணி அனுபவத்துக்கான ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு கருணை மதிப்பின் வழங்க கோரி ஆசிரியர்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கை வரும் அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share