FACT CHECK: வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? மத்திய அரசு அறிவிப்பா? உண்மை என்ன?

Published On:

| By Mathi

Banks-Saturday

பொதுத்துறை வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் மத்திய அரசு அப்படி ஒரு அறிவிப்பையோ அறிவிக்கையையோ வெளியிடவில்லை.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு தற்போது 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை. முதல், 3-வது மற்றும் 5-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும். இதை மத்திய நிதியமைச்சகம் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்கக் கோரிதான், வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். செப்டம்பர் 27ஆம் தேதி IBA மற்றும் UFBU இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 5 நாள் வங்கிப் பணி குறித்து பேச உயர்நிலைக் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் 29ஆம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் வங்கிகளின் கணக்கு முடிப்பு பணிகள் காரணமாக அந்தக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 2ஆம் தேதி கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதாவது, 5 நாள் வங்கிப் பணி குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டமே இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துவிட்டதாக மத்திய அரசின் அரசிதழ் அறிவிக்கை – கெசட் நோட்டிபிகேசன் எனக் கூறப்படும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று முதல் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசு அப்படி ஒரு அறிவிக்கையை வெளியிடாத நிலையில் சமூக வலைதளங்களிலேயே இது போலியான அறிவிக்கை என சுட்டிக் காட்டிய போதும் பலரும் இதையே பகிர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனிடையே மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் PIB Fact Check பிரிவும் சமூக வலைதளங்களில் பரவும் இந்த அரசிதழ் அறிவிக்கை போலியானது என்று தெரிவித்துள்ளது. அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறை என மத்திய அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

தற்போதைய நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமை விடுமுறை என சமூக வலைதளங்களில் உலா வரும் மத்திய அரசின் அறிவிக்கை உண்மையானது அல்ல என்பது மட்டும் உறுதியானது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share