குறைந்த பட்ஜெட்டில் தரமான உள்ளடக்கம்! Gentlewoman Movie Revie
நாயகனுடன் டூயட் ஆடுவது, காதல் காட்சிகளில் ‘க்யூட்னெஸ்’ வெளிப்படுத்துவது, கதைக்குத் தேவைப்படுகிற வகையில் சில காட்சிகளில் கவர்ச்சிகரமாக வந்து போவது, வெற்றிப்படங்களில் இடம்பெற்று அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவது என்றிருக்கும் சில நாயகிகள் குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு பிரதான பாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிற நிலையை எட்டுவர்.
வழக்கமாக, சுமார் பத்து, பதினைந்து ஆண்டு கால திரையனுபவத்திற்குப் பிறகு அதனை அடைகிறவர்கள் உண்டு. அவர்களுக்கு மத்தியில், ஒரு சில நடிகைகள் மட்டும் தொடக்கம் முதலே அப்படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள் அல்லது அப்படியான படங்களில் இடம்பெறுகிற தகுதி தனக்கிருக்கிறது என்பதை நடிப்பின் வழியே வெளிப்படுத்திச் சட்டென்று அந்த நிலையை அடைவார்கள். அப்படியொரு வரிசையில் வெகுசீக்கிரமாக இடம்பெற்றிருக்கிறார் லிஜிமோள் ஜோஸ்.

அவர் பிரதான வேடத்தில் நடித்துள்ள ‘ஜென்டில்வுமன்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Gentlewoman Movie Revie
ஜோஷ்வா சேதுராமன் எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். யுகபாரதி இதில் வசனம் எழுதியிருக்கிறார். லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன், கீதா கைலாசம், ராஜிவ் காந்தி, சுதேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். ‘ஜென்டில்வுமன்’ படத்தின் காட்சியாக்கம் மற்றும் அது தருகிற திரையனுபவம் எப்படிப்பட்டது?
காணாமல்போன ஆண்! Gentlewoman Movie Revie
ஒரு ஆணின் காதல் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர் காதலி, இன்னொருவர் மனைவி. ’உன்னைக் கைபிடிக்க விடாமல் எனது குடும்பத்தினர் தடுக்கின்றனர்’ என்று காதலியிடம் கெஞ்சுகிற அந்த மனிதர், திருமணத்திற்குப் பிறகும் அவரோடு ’காதல்’ பாராட்டுகிறார்.
அந்த விஷயம் மனைவிக்குத் தெரியாமல் மறைக்கிறார். வேலைக்குச் சென்ற கணவர் தாமதமாகத் திரும்புவது பற்றி மனைவி கேள்வி கேட்பதில்லை. ’அதைச் செய், இதைச் செய்’ என்று கணவர் கட்டளையிடுவது கண்டு முகம் சுளிப்பதில்லை.
கணவருக்குப் பிடித்தமானதைச் செய்வதே தனது கடமை என்றிருக்கிறார் அந்த மனைவி. அவர் படிக்காத பாமரப் பெண் கிடையாது. நல்ல கல்வியும் ஓரளவு செல்வ வளமும் கொண்ட பெண் தான். ஆனாலும், தனது குடும்பத்தினர், உறவினர் பின்பற்றும் ‘மனைவிக்கான அடையாளங்களை’த் தனது வாழ்வில் அவர் பிரதிபலிக்க முயற்சிக்கிறார். அதன் பிரதிபலனாக, கணவன் தன்னிடத்தில் காட்டுகிற காதலில் திளைக்கிறார்.
ஒருநாள் அந்தக் கணவனது உண்மையான முகம் வெளிப்படுகிறது.
பெண்ணை முழுக்க முழுக்கப் போகப்பொருளாக மட்டுமே பார்க்கிற நபரே தனது கணவர் என்பதை அந்த மனைவி உணர்கிறார். அதே கணத்தில், திருமணத்திற்கு முன்பிருந்த காதல் உறவை இப்போதும் கைவிடாமல் இருப்பதை அறிகிறார். அந்த உண்மையை எதிர்கொள்ளும்போது துடித்துப் போகிறார் அந்தப் பெண். Gentlewoman Movie Revie

அதன்பிறகு என்னவானது? அந்த மனைவி என்ன செய்தார்? அந்த கணவர் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்? அந்த காதலி என்னவானார் என்று சொல்கிறது ‘ஜென்டில்வுமன்’ படத்தின் மீதி.
’இது காணாமல் போகிற ஒரு ஆணின் கதை’ என்று உணர்த்தியது ‘ஜென்டில்வுமன்’ படத்தின் ட்ரெய்லர். அந்த சஸ்பென்ஸை காணச் சென்றால், அவர் எப்படி காணாமல் போகிறார் என்பதை முதல் அரைமணி நேரத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன்.
அதன் பின்விளைவுகளைப் பேசுகிறது மீதமுள்ள திரைப்படம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
திருப்தி தருகிற படைப்பு! Gentlewoman Movie Revie
இந்தக் கதையில் அரவிந்த் என்பது அந்த ஆணின் பெயர். அவரது மனைவியாகப் பூரணியும், காதலியாக அன்னாவும் இருக்கின்றனர். இது போகச் சுமார் ஒரு டஜன் பாத்திரங்களே இதில் வந்து போகின்றன. Gentlewoman Movie Revie
’குறைவான பாத்திரங்களை வைத்துக்கொண்டு, நகரத்து பரபரப்பைக் காட்டுகிற ஒரு கதையா’? நிச்சயம் அது சவாலான விஷயம் தான்.
இந்த படத்தைத் திரையில் பார்க்கையில் தொலைக்காட்சித் தொடர் போலவோ, குறும்படம் போலவோ நாம் உணர முடியாது. நாடகத்தனமாகச் சில இடங்களில் சில பாத்திரங்கள் வசனம் பேசினாலும், காட்சியாக்கம் ஒரு திரைப்படத்திற்கானதாகவே தெரியும்.
அந்த வகையில் பிரதான பாத்திரங்களின் பின்னணியில் நடமாடும் மனிதர்கள், அவர்களுக்குப் பின்னிருக்கிற பொருட்கள், அவர்கள் இருக்கிற இடம் எல்லாவற்றையும் கவனமாகப் பதிவு செய்த வகையில் காட்சியாக்கம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
காத்தவராயனின் ஒளிப்பதிவு அந்த வகையில் சிறப்பான உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. பின்பாதியில் வரும் மோதல் காட்சியொன்றில் அவரது பணி சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
கதை நிகழும் களங்களைச் சரியாக உணர்த்தவும், காட்சியாக்கத்திற்கு அழகு சேர்க்கவும் உதவியிருக்கிறது அமரனின் தயாரிப்பு வடிவமைப்பு.

இளையராஜா சேகரின் படத்தொகுப்பானது கதையை உள்வாங்கிக்கொள்வதில் சிரமங்களைத் தரவில்லை. அதேநேரத்தில், திரைக்கதையில் பூடகமாகச் சில விஷயங்கள் உணர்த்தப்பட வேண்டுமென்ற இயக்குனரின் எண்ணத்தைச் சரியாகக் கடத்தியிருக்கிறார்.
ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ பணிகளும் சிறப்பாகத் திரையில் தெரிகின்றன. இப்படத்தின் பலமாக வசனங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், ஆங்காங்கே பிரச்சாரத் தொனியில் நாயகி பாத்திரம் பேசுவது கொஞ்சம் துருத்தலாகத் தெரிகிறது.
ஒரு காட்சியில் ‘உனது காதலர்’, ‘எனது கணவர்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘உன் குழந்தையோட அப்பன்’ என்ற வார்த்தை வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தினசரி வாழ்வில் இது போன்ற பிரயோகங்களை நாம் கேட்டிருந்தாலும், அது உணர்த்துகிற அர்த்தம் இப்படத்தின் மையச்சரடுக்கும் கிளைமேக்ஸ் காட்சிக்கும் பொருத்தமானதாக உள்ளது. அதற்காகவே யுகபாரதியைத் தனியாகப் பாராட்டலாம். இப்படத்தின் மிகப்பெரிய பலம், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை.
அவரது இசையைக் கழித்துவிட்டால், இப்படைப்பில் நிறைந்திருக்கிற வீரியம் பாதியாகக் குறைந்துவிடும். பல காட்சிகளில் அவரது இசையே வசனங்களுக்கான தேவையை அகற்றிவிட்டு, பாத்திரங்களின் உணர்வெழுச்சியை மிகச்சரியாகக் காட்ட உதவியிருக்கிறது. இது போக இரண்டு பாடல்களையும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கத் தந்திருக்கிறார். Gentlewoman Movie Revie

லிஜிமோள் ஜோஸ் இதில் மையப்பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார். தொடக்கக் காட்சிகளில் கணவரிடத்தில் பவ்யத்தை வெளிப்படுதுகிறபோதும், பின்பாதிக் காட்சிகளில் ’சுயாதீனமான பெண்’ என்பதைப் பார்வை மற்றும் உடல்மொழியின் வழியாகச் சொல்கிறபோதும் அசத்தியிருக்கிறார். மொத்தப்படத்தையும் தாங்குகிற வல்லமை அவருக்குண்டு என நிரூபித்திருக்கிறது ‘ஜென்டில்வுமன்’.
லாஸ்லியா இதில் அன்னா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது அழகும் சரி, நடிப்பும் சரி, திரைக்கதைக்குத் தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஹரிகிருஷ்ணன் இதில் நாயகன். முதல் அரை மணி நேரத்தில் தான் தோன்றும் காட்சிகளின் வழியே நம்மிடத்தில் அவரது நடிப்பு ஏற்படுத்துகிற தாக்கம் படம் முடிந்தபின்னும் தொடர்கிறது. குறைவான காட்சிகளில் நடித்து அதனைச் சாத்தியப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.
இதில் உதவி ஆணையராக வரும் சுதேஷ் மிரட்சியை உருவாக்கியிருக்கிறார். மலையாள நடிகர், திரைக்கதையாசிரியர் முரளி கோபியை நினைவூட்டுகிறார்.
இவர்களோடு நந்திதா சிவகுமார், ராஜிவ்காந்தி, தாரணி, வைரபாலன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோரது பங்களிப்பும் இதில் இருக்கிறது.
இந்தப் படத்தின் கதையில் லாஜிக் மீறல்கள் நிறைந்திருப்பதாகச் சிலர் கருதலாம். ‘இது இப்படி ஆகியிருக்கும்’, ‘அது அப்படி ஆகியிருக்கும்’ என்று கருத்து சொல்லவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நிச்சயம் அவை இக்கதையிலுள்ள பலவீனங்கள் தாம்.
அனைத்தையும் மீறி ஒரு பெண் சமூகத்தில் உள்ள ஆண்களால் எப்படி நோக்கப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது ‘ஜென்டில்வுமன்’. அதற்குத் தக்க வகையில் காட்சிகளை அமைத்து ஒரு கதையைச் சொல்லிய வகையில் கவர்கிறார் இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன்.
கிளைமேக்ஸும் சரி, அதனைத் தொடர்ந்து வருகிற ‘செகண்ட் கிளைமேக்ஸும்’ சரி, நம்மை மீண்டும் திரைக்கதையை அசைபோட வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. Gentlewoman Movie Revie
மிகச்சிறிய பட்ஜெட்டில் ‘தரமான’ உள்ளடக்கத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது இப்படம். அதுதானே தேவை! Gentlewoman Movie Revie