யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை அடையாளப்படுத்தும் புகைப்படம், பெயர், இசைஞானி பட்டம், குரல் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா தொடர்ந்த வழக்கை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருக்கிறது.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும் – அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இளையராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
இதுவரை காப்பி ரைட் விஷயத்தில் இளையராஜா அடுத்தடுத்து வழக்குகள் போடும்போது அவர் செய்வதில் என்ன தப்பு? அவர் செய்வது சரிதான். உலகளாவிய இசை காப்புரிமை விதிகளின்படி அது லீகல்தான் என்றவர்கள் கூட.
இப்போது கொஞ்சம் ஆடிப் போய்தான் நிற்கிறார்கள்.
சட்டப்படி ராஜாவின் வழக்கு நியாயமானதாகவே இருக்கட்டும். அதனால் கோர்ட் அதை ஏற்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தர்மப்படி இளையராஜா செய்வது நியாயமா என்ற கேள்வி பலரின் மனதுக்குள்ளும் எழுகிறது.
எம் ஜி ஆர் சிவாஜி படங்கள் வெளியானபோது எல்லாம் அந்தப் படத்தின் புகைப்படம், பெயர், போஸ்டர் இவைகளை சிறு வியாபாரிகள் பலரும் அச்சடித்து விற்பனை செய்வார்கள். படங்களுக்கு விளம்பரம் என்பது மட்டுமின்றி அது அந்த ஏழை எளிய மக்களின் வயிற்றுப் பசி ஆற உதவும். ஒரு படத்தின் பாடல்கள் வந்த உடன். அதைக் கேட்டு எழுதி அச்சடித்து அவரவர்கள் ஏரியாவில் யார் யாரோ விற்பார்கள். எந்தக் கவிஞரும் இசை அமைப்பாளரும் அவர்கள் மேல் வழக்குப் போட்டது இல்லை.
அதுதான் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கும் ரசிகர்களுக்கும் ரசனைக்கு அப்பாற்பட்டு உள்ள பிணைப்பு. நன்றி உணர்ச்சி. நெகிழ்ச்சி.
இந்த அற்புதமான விஷயத்தை முதன் முதலில் உடைத்தவர் லதா ரஜினிகாந்த்,
பாபா படம் வரும்போது இதே பாணியில் ரசிகர்கள் சிறு வியாபாரிகள் ரஜினி படம், படத்தின் பெயர் போட்ட கீ செயின்கள் பனியன்கள் துண்டுகள் அச்சடித்து விற்பனை செய்ய முயன்றபோது, அதற்கு தடை வாங்கினார். அந்த வருமானமும் தங்களையே வரும்படி பார்த்துக் கொண்டார்.
அங்கே ஆரம்பித்ததுதான் இப்போது இளையராஜா வரை வந்து நிற்கிறது.
இதற்கிடையே வருமானம் ஈட்டும் வகையில் அவரது பெயரை புகைப்படத்தை பயன்படுத்தவே தடை. மற்றபடி ஒன்றும் இல்லை என்கிறார்கள். அதன்படி யூ டியூப், வீடியோ, விளம்பரம் போன்ற விஷயங்களுக்குதான் கட்டுப்பாடு என்றும் கூறுகிறார்கள். பிரச்னை என்ன வென்றால் சலவைக்கடை, சலூன் கடை, ஆடியோ கடை எல்லாமே இந்த லிஸ்டில் வருமே. ஒருவர் முகநூலில் ராஜாவைப் பாராட்டி எழுதுகிறார் என்றால் முகநூல் மூலம் அவருக்கு வருமானம் வருகிறது என்றால் அவரும் பயன்படுத்த முடியாதே.
தவிர, இளையராஜா என்ற பெயரில் ஒரு கலை இயக்குனர் கூட சினிமாவில் இருக்கிறார். பிறகு எப்படி இளையராஜா என்ற பெயருக்கு அவர் உரிமை கொண்டாட முடியும்?
இசைஞானி என்பது அவருக்கு கலைஞர் கொடுத்த பட்டம். அது எப்படி இளையராஜாவுக்கு காப்பிரைட் ஆக அமையும்.
தவிர இசைஞானியார் என்ற பெயரில் 63 நாயன்மார்களில் ஒருவர் இருந்திருக்கிறார். ஆக இசைஞானியார் ஆடியோ ஷாப் என்று பெயர் வைத்தால் இளையராஜா எப்படி உரிமை கொண்டாட முடியும்?
என்றெல்லாம் கேள்விகள்!
இந்த வழக்கின் மூலம் நிறைய அதிருப்தியாளர்களை சந்தித்துள்ளார் இளையராஜா.
இப்போதே, ‘யுவன் சங்கர் ராஜாவின் அப்பா நல்ல இசையமைப்பாளர், கங்கை அமரனின் அண்ணன் நல்ல பாட்டுக்கள் கொடுப்பார்.
பிரேம்ஜியின் அண்ணனின் அப்பாவின் பெற்றோரின் மகன் நல்ல பின்னணி இசை அமைப்பார்…
என்றெல்லாம் இளையராஜாவை பலரும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த கோர்ட் ஆணை மேல்முறையீடு செய்தால் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருக்கலாம்.
ஆனால் இந்தக் கறை… நல்லது இல்லை.
- ராஜ திருமகன்
