ADVERTISEMENT

ராஜேந்திர பாலாஜிக்கு செக்… ஆக்‌ஷனை தொடங்கிய போலீஸ்!

Published On:

| By Selvam

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Chargesheet filed against rajendra balaji

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி ஏமாற்றி விட்டதாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் கடந்த 2021-ஆம் ஆண்டு விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, ராஜேந்திரபாலாஜி தன்னிடம் ரூ.3 கோடி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில், ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய நான்கு பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கர்நாடகா மாநிலம் ஹாசனில் வைத்து தனிப்படை போலீசார் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் மீதான விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்காததால், நிலுவையில் இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில், ராஜேந்திர பாலாஜி மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த கோப்பின் மீது ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ராஜேந்திர பாலாஜி மீது சட்டநடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்கி இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மூலம் இ பைலிங் முறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மீதான இரண்டு வழக்குகளிலும் 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. Chargesheet filed against rajendra balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel