ஆளுநர் கொடுத்த அனுமதி : ராஜேந்திர பாலாஜிக்கு வந்த சிக்கல்!

Published On:

| By Kavi

Permission given by the Governor

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். Permission given by the Governor

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடிசெய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தன் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில், ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுகிறது என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் வெங்கடநாராயண பாட்டி, “ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்குத் தொடர ஒப்புதல் கோரி தமிழக அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆளுநரின் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இந்த வழக்கு மார்ச் 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில், முதலில் வழக்கு தொடர்பாக முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என்று ஆளுநர் கேட்டார். ஆனால் இப்போது 400 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார் என்று வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் ஆவணங்களை மொழிபெயர்த்து கொடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த மொழிபெயர்ப்பு ஆவணம் கிடைத்ததும் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இவ்வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடரும் இசைவாணையை ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது.

இதனடிப்படையில், இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. Permission given by the Governor

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share