காவிரி நதிநீர் பிரச்சனையில் (Cauvery Dispute) தமிழகத்துக்கு இருக்கிற ஒரே ஒரு வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான் என்று தமிழக சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி செய்தியாளர்களிடம் நிர்மல்குமார் கூறியதாவது: 3 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவறான தகவலைப் பரப்பி மக்களிடையே பீதியை உருவாக்க நினைக்கிறார். மின்வாரியம் தாமாகவே முன்வந்து 3.70 லட்சம் மின் இணைப்புகளை ஆய்வு செய்து வருகிறது. 10,000 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 50,60-ல்தான் மின் அளவீடு- ரீடிங் மாறுபாடு இருந்தது. மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் தகவலை வைத்துக் கொண்டு பேசக் கூடாது.
மேகதாது அணை பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட மறுத்தால் கர்நாடகா அணைகளை மத்திய அரசு தன்வசமாக்கி திறந்துவிடக் கூடிய சரத்துகள் முன்னர் இருந்தன. அதைவிட்டுவிட்டோம். இப்போதைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி உச்சநீதிமன்றத்தை அணுகுவது.
கர்நாடகாவில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
