”தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர்” – மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்!

Published On:

| By Kavi

தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. 

ADVERTISEMENT

இந்தநிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்,  ”எங்கள் தலைமை செயலாளரிடம் தமிழகத்திலிருந்து  முதல்வர் விஜய் கர்நாடக வர விரும்புவதாகவும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச விருப்பதாகவும் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் தற்போதைய சூழலில் முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வர வேண்டாம்” என்று கூறியிருந்தார். 

இந்தசூழலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், முதல்வர் விஜய்யை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT

அதில், ”தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது  விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.

ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.

நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.

தமிழ்நாடு  முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share