5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் ஆகியோர் போட்டியிட்ட கரூர், விராலிமலை, மற்றும் பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “வேட்பாளர்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்வில் கடந்த ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருச்சி கிழக்கு, கரூர் விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க நீதிபதிகள் தடை விதித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று (ஜூலை 31) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால் வழக்கு விசாரணைக்கு வராததால், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறித்து மனுதாரர் சார்பில் நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
