உதயநிதி தலைக்கு விலை வைத்த அயோத்தியா சாமியார் மீது மதுரை திமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியிருந்த நிலையில்,
அவரது தலையை வெட்டி எடுத்து வந்தால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா அறிவித்தார்.
உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்தி கிழித்து அதனை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் மதுரை திமுக வழக்கறிஞர் அணியினர் அயோத்தி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் சாமியாரின் இத்தகைய செயல் மத இன கலவரத்தை தூண்டும் வகையிலும் தமிழ்நாடு மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
அதன்படி அயோத்தி சாமியார் மற்றும் அவரது வீடியோவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட பியூஸ் ராய் ஆகிய இருவர் மீதும் 153, 153 A (1) (a), 504, 505 (1) (b), 505 (2) & 506 (ii) ஆகிய பிரிவுகளில்,
அதாவது கொலை மிரட்டல், பொது அமைதியை சீர்குலைத்தல், இரு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா,
“சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கிறார் என்று” கூறியிருந்தார்.
அமித் மாள்யாவின் இந்த பதிவை தொடர்ந்து வட மாநிலங்களில் உதயநிதியின் பேச்சு சர்ச்சையாக வெடித்தது.
இந்த சூழலில் அமித்மாள்வியா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில், கலகத்தை விளைவிக்கும் உள்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல், வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்த்தல்,
ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தல், உள்கருத்துடன் அமைதியின்மையை ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அயோத்தி சாமியார் மீது திமுக வழக்கறிஞர் பிரிவு புகார் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா