திமுக இளைஞரணி மாநாடு வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி கொங்கு பூமியான சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இதுவரை டெல்டா மண்டலம், தென் மண்டலம் ஆகியவற்றில் நடந்த திமுகவின் பாகப் பொறுப்பாளர்கள் மாநாடு அடுத்து கொங்கு மண்டலத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி காங்கேயத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே திமுகவின் கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் மாநாடு முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறது. அடுத்ததாக திமுகவின் தோழமைக் கட்சியான புதிய திராவிட கழகத்தின் சார்பில் 2024 ஜனவரியில் ஈரோட்டில் மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு, அந்த மாநாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அழைப்பதில் தீவிரமாக இருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கே.எஸ். ராஜ் (கவுண்டர்).
அடுத்தடுத்து கொங்கு பகுதியில் அரசியல் மாநாடுகள் அரங்கேற இருக்கின்ற நிலையில் இதுகுறித்து புதிய திராவிட கழகத்தின் தலைவரான கே.எஸ். ராஜிடம் பேசினோம்.
“கொங்கு பகுதியில் திமுகவுக்கு உற்ற தோழமையாக புதிய திராவிட கழகமும், வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்கமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். எங்களது ஐந்தாவது மாநாட்டை வரும் ஜனவரி மாதம் ஈரோட்டில் நடத்த இருக்கிறோம். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி மாநாட்டுக்கு தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர் பெருமக்களை அழைக்க இருக்கிறோம். எங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தார். எங்களது மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கொங்கு பகுதியில் அரசியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட சமுதாயமே பெரும்பான்மையான கட்சிகளில் கோலோச்சுகிறது. அவர்கள் வளரட்டும்…அதேநேரம் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத வேட்டுவ கவுண்டர்களும் வளரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசியல் பிரநிதித்துவமும் வழங்கப்படவேண்டும்.
வேட்டுவ கவுண்டர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகளான வேடர், வேட்டுவர், வில் வேடுவர், மலைவாழ் வேடன், மலைவாழ் வேட்டுவர், புன்னம் வேட்டுவர், பூலுவர் வேட்டுவர், வால்மீகி ஆகிய பெயர்களில் தமிழகத்தில் வாழும் எங்கள் சமுதாயத்தினர் பிசி, எம்.பி.சி, எஸ்.சி. எஸ்.டி. டிசி ஆகிய பிரிவுகளில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து எம்பிசியாக வேட்டுவ கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால கோரிக்கை.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அப்போதைய திமுக தலைவரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘கடையேழு வள்ளல்களில் ஒருவரான கொல்லிமலையை ஆண்ட வேட்டுவ கவுண்டர் மன்னர் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை” என்ற கே.எஸ்.ராஜ்,
“எங்கள் கோரிக்கை தொடர்பாகவும் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை அழைப்பது தொடர்பாகவும் ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை சந்தித்து வேண்டுகோள் வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆவன செய்வதாக கூறியுள்ளார்கள்” என்கிறார் கே.எஸ்.ராஜ்.
கொங்கு வேளாளர் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்வதாக ஒரு கருத்து மேற்கு மண்டலத்தில் இருக்கும் நிலையில்… புதிய திராவிட கழகம் போன்ற கொங்குவேளாளர் அல்லாத அமைப்புகளை திமுக ஊக்குவிப்பது என்பது அதன் அரசியல் வியூகத்தில் ஒன்றாக இருக்கிறது. இது தொடர்பாக ராஜ் ஏற்கனவே முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனை சந்தித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவின் இந்த கொங்கு வியூகம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்.
–வேந்தன்
அமைச்சர் உதயநிதி ஒரு ஈசல் : மன்னார்குடி ஜீயர்!
டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட கோபத்தில் உதயநிதி… மாற்றப்படும் மாவட்டங்கள்?