எங்கள் பெயரைப் பயன்படுத்தி டிரான்ஸ்பர் அல்லது டெண்டர் வாங்கித் தருவதாக யாராவது கூறினால், அவர்களைக் கட்டிப்போட்டு போலீசில் ஒப்படையுங்கள் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (ஜூன் 20) பல்வேறு மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ”நம்முடைய முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இன்னும் 20 வருடத்திற்கு அந்த ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எங்கள் பெயரைச் சொல்லி, நான் டிரான்ஸ்பர் வாங்கித் தருகிறேன்… டெண்டர் வாங்கித் தருகிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களை கட்டிப்போட்டு வைத்து விடுங்கள். பின்னர் போலீஸாரிடம் சொன்னால் உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.
ஏனென்றால் எங்களோடு வந்து பலர் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி போட்டோ எடுக்கும்போது ‘நீ வராதப்பா’ என்று எங்களால் சொல்ல முடியாது.
இதில் 99 பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள். அந்த ஒருவர் தான் இடக்குமுடக்கான ஆளாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும். நாங்கள் எங்கள் வேலையை பார்த்துகொண்டு இருந்தால், அவர்கள் பாட்டுக்கு வந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
இப்படி இருக்கையில் யாரேனும் தவறு செய்தால் உடனே அது தவெக உறுப்பினர்தான் என்று சொல்லி விடுகிறார்கள். அதுவும் ஒரு தினசரி பத்திரிக்கை யார் எது செய்தாலும் அது தமிழக வெற்றி கழக உறுப்பினர் தான் என்று கூறி, எங்கள் துண்டெல்லாம் போட்டு டிசைன் செய்து செய்தி போடுகிறது.
மக்கள் தீர்ப்பு கொடுத்து எங்கள் தலைவர் முதலமைச்சராகிவிட்டார். நாங்கள் ஏதாவது தவறு செய்தால் எங்களிடம் சொல்லுங்கள். தவறாக இருந்தால் கண்டிப்பாக அதை திருத்திக் கொள்வோம். அப்படித்தான் எங்கள் முதல்வர் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
இங்கு மாற்று கட்சியில் இருந்து பலர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் சொல்வது, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாருங்கள் என்பது தான்.
மக்களுக்கு என்ன தேவை… மக்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்… எந்த தொகுதியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை உடனடியாக செய்து தருகிறோம்” என்று கூறினார்.
