சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓசூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், சமூகநீதி, சுயமரியாதை, வளர்ச்சிக்கு சொந்தமான மண்ணில் இன்று (ஏப்ரல் 19) உரையாற்றுகிறேன். சமூக நீதி கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். இந்திய நாடே ஸ்டாலின் பின்னால் இருக்கிறது. உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? மோடி வேண்டுமா? என்று கேட்டு பிரச்சாரம் செய்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னாடி தமிழ்நாட்டோட உரிமைகளை திமுகவால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு உங்கள் முன்னாடி கெத்தாக நின்று கொண்டிருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வந்திருக்கிறார். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த அளவு வலிமையாக தொடர்வதற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மூத்த தலைவர் அவர். அதேபோல நேற்று அன்பிற்கினிய சகோதரர் ராகுல் காந்தியும் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போயிருக்கிறார்.
அவர் பிரச்சாரம் செய்கிறபோது ஒன்றை குறிப்பிட்டு சொன்னார் – ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடியால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது’. அதனால்தான் அடிமை அதிமுகவை தமிழ்நாட்டில நிறுவ வேண்டும் என்று மோடி பார்க்கிறார் என வலிமையா பேசிட்டு போயிருக்கிறார்.
நான் கோவையில பரப்புரைக்கு போனபோது, சகோதரர் ராகுல் திருவள்ளூர் பகுதிக்கும் டெல்டா மாவட்டத்திற்கும் வந்திருந்தார். நான் நாளைக்கு சென்னையில் பிரச்சாரம் பண்ணும்போது அவர் தென்கோடியில குமரியில பிரச்சாரத்தில் இருப்பார். ஆக சுத்தி சுத்தி நானும் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தியும் எல்லா திசைகளும் நம்ம கூட்டணியோட வெற்றியை உறுதிப்படுத்திட்டு வரோம்.
அதுக்கு மேல வலிமை சேர்க்க வந்திருக்கிற மரியாதைக்குரிய கார்கேவுக்கு உங்கள் அனைவரின் சார்பில் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்க விரும்புறேன்” என்றார்.
ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே கார்கே அவசரமாக கிளம்பினார். அவரை வழியனுப்பி வைத்து பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டு உரிமைகளுக்காக பாஜககிட்ட குரல் கொடுக்க வக்கற்ற பழனிசாமி என்னை பார்த்து கேட்டிருக்கிறார். முதலமைச்சர் காரில் போகும்போது கிரிக்கெட் பார்ப்பது தவறில்லை; காரில் போகும்போது கர்ச்சீப் மூலம் முகத்தை மூடிவிட்டு போனீர்களே அதுதான் கேவலம்!
முதலமைச்சராக இருந்துகொண்டு தூத்துக்குடியில் 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை TV ‘யில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என வெக்கமில்லாமல் சொன்னீர்களே அதுதான் மிகப்பெரிய கேவலம்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், “பழனிசாமி அவருடைய ஓனர் மோடியைப் பார்த்துதான் கேள்வி கேட்கணும். நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என்று சொல்வதை விட ‘பாஜக தலைவர் மோடியின் அரசியல் உரை’ என்றுதான் சொல்லணும். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது தேசிய கொடி பின்னணியில வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளை திட்டி அவர் பேசி இருக்கிறார்.
தேர்தல் பரப்புரை கூட்டத்தில பேச வேண்டியதை எல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான விதிமீறல். டிலிமிட்டேஷன் விவகாரத்தில, நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோல்வி அடைந்த பதட்டத்தில அவர் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார். மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுக்கிறார்கள் என்று சொல்லி அப்படிப்பட்ட அபாண்டத்தை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
இதுவும் வேலைக்கு ஆகல. தேர்தல் நேரத்தில அவர் நம்ம மேல ஏவ நினைச்ச அஸ்திரம் இப்போ பூமராங் ஆகி அவருக்கே வினை ஆயிடுச்சு” என்று குறிப்பிட்டார்.
