பீகார் ஓடும் ரயிலில் நெரிசலில் சிக்கி ‘தேர்வர்’ மரணம்.. ராகுல் பகிர்ந்த வீடியோ- ரயில்வே நிர்வாகம் மறுப்பு!

Published On:

| By Mathi

Bihar train video: Railways refutes viral death claims

பீகாரில் (Bihar) காவல்துறை தேர்வுக்காக சென்ற இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக பகிரப்படும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ குறித்து கிழக்கு மத்திய ரயில்வே விளக்கமும் அளித்துள்ளது.

பீகாரில் அண்மையில் நடைபெற்ற காவல் துறை தேர்வுக்கு செல்ல, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடலிபுத்திரா ரயில் நிலையத்தில் திரண்டனர். ஆனால் அங்கு போதிய ரயில் வசதிகள் இல்லாததால், ரயில் பெட்டிகளில் இடம் பிடிக்கத் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலால் கடும் அதிருப்தியடைந்த மாணவர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ரயில் நிலையத்தில் கற்கள் வீசப்பட்டன. பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லத்தி சார்ஜ் செய்தும் கூட்டத்தைக் கலைத்தனர்.

இதற்கிடையில், ரயிலுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் மயங்கி விழுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நெரிசலில் சிக்கி அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால், கிழக்கு மத்திய ரயில்வே (ECR) நிர்வாகம் இதனை திட்டவட்டமாக மறுத்தது. அந்தச் சம்பவம் பாடலிபுத்திரா ரயில் நிலையத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், எவரும் உயிரிழக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் வீடியோவில் உள்ள நபர் உடல்நலக் குறைவு அல்லது சோர்வு காரணமாகவே பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share