தமிழ் மண்ணின் கதைகளைச் சொன்ன மாபெரும் கலைஞனின் பயணம் நிறைவு: அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Bharathiraja

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84.

திரைப்பயணமும் சாதனைகளும்

கடந்த 1977-ஆம் ஆண்டு கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாரதிராஜா. அதுவரை ஸ்டுடியோ அரங்குகளுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை, கிராமங்களை நோக்கி நகர்த்தி, மண்ணின் வாசனை மாறாத எதார்த்த கதைகளைப் பதிவு செய்தவர் இவரே ஆவார்.

ADVERTISEMENT

தொடர்ந்து ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல் பூக்கள் ஆகிய 6 திரைப்படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பாராட்டுப் பெற்றார்.

ADVERTISEMENT

குடும்பப் பின்னணி

பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா ஆவார். இத்தம்பதியருக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மகன் மனோஜ், பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மனோஜ் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

மகனின் மறைவுக்குப் பிறகு பாரதிராஜா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து திரும்பிய அவருக்குச் சுவாசப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உடல்நலம் தேறி வீடு திரும்பிய அவர், நீலாங்கரை இல்லத்தில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

ADVERTISEMENT

தலைவர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி:

அவரது மறைவுச் செய்தி திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, சத்யராஜ், பாண்டியராஜன், நடிகைகள் ராதிகா, ரேகா, ராதா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு:

தமிழ் சினிமாவுக்கு பாரதிராஜா ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வத்தலக்குண்டு காட்ரோடு அருகே உள்ள அவரது பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உறவினர்களும், தேனி மாவட்ட பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) பிற்பகலில் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share