ADVERTISEMENT

நான் கேட்டு வாங்கி பிரசாரம் செய்யும் தொகுதி அவிநாசி.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி

Published On:

| By Mathi

அவிநாசி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

அவிநாசி தொகுதியில் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் பேசியதாவது: இன்று கையில் பூங்கொத்துடன் நிற்கும் இது… உங்களுக்குத்தான் அது. இவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். கொரோனாவின் போது தன்னலமற்ற சேவை செய்தவர். இவரைப் பார்க்கும் முன்னரே இவருடைய புகழ், இவர்களுடைய சாதனை என்னை வந்தடைந்தது.

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி, நான் நின்ற தொகுதியில் நிற்கிறார். கண்டிப்பா எனக்காக ஒரு காசு கூட வாங்காம ஓட்டுப் போட்ட 50,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த ஓட்டை செந்தில் பாலாஜிக்குப் போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் இங்கே இந்த பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று நான் கேட்டு வாங்கிய தொகுதி இது. காரணம் டாக்டர் கோகிலாமணி.

ADVERTISEMENT

என்னை அவங்களுக்கு முன்னாடியே தெரியுமான்னா… இந்த மாதிரி நடக்கும், தமிழகம் இந்தச் சாதனையைச் செய்யும் என்று பல வருடங்களாக நான் நம்பிக்கொண்டிருந்தவன். அந்த நம்பிக்கையின் உதாரணம் இங்கே இருக்கும் டாக்டர் கோகிலாமணி.

‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொள்கிறோமே, அந்த திராவிட மாடலின் ‘யூத் ஐகான்’ (Youth Icon) டாக்டர் கோகிலாமணி.

ADVERTISEMENT

28 வயது… கூட்டிச் சொல்லலையே? கரெக்ட். 28 வயது, அதில் அவர் அரசுப் பள்ளியில் பயின்றவர். நம்முடைய சமூக நீதியால் முன்னுக்கு வந்தவர். இன்று மத்திய அமைச்சரைத் துணிவுடன் எதிர்க்கும்… புறநானூற்றுல பார்த்திருக்கோமே, அந்த மாதிரி வீரமங்கை இவர். அவரை இங்கே தூக்கிப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு, திராவிட முன்னேற்றக் கழகம், சமூக நீதி. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டுக்கு ஒரு கோகிலாமணி உருவாக வேண்டும். அப்படி உருவாக வேண்டும் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படிக் கேட்பவன் நான் கமல்ஹாசன்.

இதுல வந்து என் தொண்டர்கள் போலவே, ‘எங்களுக்கு என்ன சீட்? எந்த இடம்? எப்படி? இதனால் என்ன லாபம்?’ என்று கேட்காமல், இந்தச் சகோதரிக்குக் கிடைக்கும் அந்தப் பெருமை எங்கள் பெருமை. என்னுடைய மகள் அக்ஷராவை விடக் குறைந்த வயதுடையவர் இவர்.

33% (இடஒதுக்கீடு) என்று சொல்லியிருக்காங்க. அதை எத்தனையோ நாளாச் சொல்லிட்டு இருக்கோம், இயற்றியும் விட்டோம். இருந்தாலும் அதையும் வேற எதையும் முடிச்சுப் போடுறாங்க. விடமாட்டோம்! இந்த 543-க்குள்ள 33% கிடைக்கிற வரைக்கும் விடமாட்டான் இந்த கமல்ஹாசன்! அதற்கும் என் பேரைச் சொல்லிக்கிறேன் தைரியமா.

சொன்னதைச் செய்தார் என் சகோதரர் மு.க. ஸ்டாலின் என்பதற்குப் பல உதாரணங்கள். அதில் ஓர் உதாரணம்தான் டாக்டர் கோகிலாமணி இது வேற எந்த மாநிலத்திலும் எதிர்பார்க்க முடியாது.

இது நம்முடைய பெருமை. இப்போது வரும்போது 10 மைல் பாலத்தைக் கடந்து வந்தேன், ஜி.டி.ஆர் பாலம். பெருமையாக இருக்கிறது. ஆனால் இந்த ஊருக்கு இந்த ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி பார்க்கும்போது உங்களுக்கு மெட்ரோவெல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்க. ஆனால் வேற எங்கேயோ இதைவிட சின்ன பாப்புலேஷன் இருக்குற ஊருக்கெல்லாம் மெட்ரோ கொடுத்திருக்காங்க. இதுதான் அவர்கள் தரும் நீதி.

ஆனால் மக்கள் நீதிக்காகப் போராடும் மக்கள் நீதி மையம் அந்த மாதிரி நீதியெல்லாம் ஏற்காது.

தலைவன் இருக்கின்றான். அதைச் சொல்லி இந்தப் பாட்டை நீங்கள் கேட்க வேண்டும். வரிக்கு வரி உங்கள் உணர்வு இருக்கும்.

திராவிடம் நாடு தழுவியது என்று தைரியமாக குரல் கொடுப்பவன் நான்.

மகளிர் உரிமைத் தொகை 8000. அதெல்லாம் எங்கிருந்து கொடுக்கிறாரு? யார் வீட்டுச் சொத்துங்குறாரு? ஜவஹர்லால் நேரு அவர்கள் எந்தச் சொத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாரோ அதே சொத்திலிருந்து தான் ஸ்டாலின் அவர்களும் எடுத்துக் கொடுக்கிறார். இது உங்கள் சொத்து, உங்களுக்குத் திரும்பி வரவேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை. 4 கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி அரசு மருத்துவமனை புனரமைப்பு.

திருமுருகன்பூண்டியில் 39 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பார்க். புதிய வணிக வளாகம் அவிநாசியில் 6 கோடிக்கு. இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அந்தக் கலசமாக என் கண்ணில் பட்டது டாக்டர் கோகிலாமணி தான்.

இதை இன்னும் சீக்கிரமாகவே தமிழ்நாடு சாதித்திருக்க முடியும், இடைஞ்சல்கள் இல்லாமல் இருந்திருந்தால். வடக்கிலிருந்து நம்மைத் தேய்த்துக் கொண்டும் இடித்துக் கொண்டும் இருந்தவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பல கோகிலாமணிகள் இங்கே நின்றிருப்பார்கள். தமிழினத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம்.

வந்தாரை வாழ வைப்போம். ஆனால் இங்கே வாகை சூடலாம் என்று எண்ணி வந்தால் விரட்டி அடிப்போம். இந்த உறுதியை நான் எடுக்கும் உறுதியாக மட்டுமல்லாமல் நாம் எடுக்கும் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ் வீரம் தரணியாளும். எப்படி சொல்றீங்க? பின்னாடி திரும்பிப் பார். ஆண்டிருக்கு இதுக்கு முன்னாடி. கடல் கடந்து ஆண்டிருக்கிறோம். அதை இப்பவும் செய்ய முடியும், வாள் இல்லாமல், கேடயமும் இல்லாமல், கல்வியை வைத்துக் கொண்டே செய்ய முடியும். அதற்கு ஒரு உதாரணம் இங்கே இருக்கிறார் டாக்டர் கோகிலாமணி. எஜுகேஷன், இண்டஸ்ட்ரி, வுமன் எம்பவர்மென்ட் (Education, Industry, Women Empowerment) – எதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

இது நாம் மார்தட்டிச் சொல்லும் டேட்டா (Data) அல்ல, நம்மைப் பிடிக்காத எதிரி கசப்பாக விழுங்கிக் கொண்டிருக்கும் உண்மை. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share