ஆவடியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரு வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவுக்குப் பின் ஆவடி அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம், நீண்ட நேரமாகியும் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் ஆவடி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் முறையாகப் பதிலளிக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடியில் மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து இருவேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துப் போலீசாரும் ஆவடி காவல் துறையினரும், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அலுவலக முற்றுகை மற்றும் சாலை மறியல் காரணமாக ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
