நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
கனமழை எச்சரிக்கை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்:
தலைநகர் சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
