இல்லத்தரசிகள் இந்த நாட்டை கட்டமைப்பவர்கள் என்றும் அவர்களது சேவையின் மதிப்பு மாதம் ரூ.30,000 என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தொன்றில் ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க2024-இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஆனால் இந்த தொகை மிகக் குறைவு என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று (ஜூன் 11) நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசிஹ் அமர்வு விசாரித்தது.
அப்போது, ”ஒரு இல்லத்தரசியின் பங்களிப்பு என்பது வீட்டு வேலைகளுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை, அது நாட்டின் கட்டமைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரு இல்லத்தரசியின் மரணம் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆவதால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் ‘குடும்பப் பராமரிப்பு இழப்பானது’, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டைத் தீர்மானிக்கும் போது தனிப்பிரிவாக அங்கீகரிக்கப்பட வேண்டும்
ஒரு இல்லத்தரசி, ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறார். அந்தவகையில் இல்லத்தரசி நாட்டை உருவாக்குகிறார் (நாட்டின் கட்டமைப்பாளர்).
ஒரு நாட்டின் கட்டமைப்பாளராக இல்லத்தரசியைக் கருதி, அவர் இல்லாததால் ஏற்படும் குடும்பப் பராமரிப்பு இழப்பிற்கான குறைந்தபட்ச மாதாந்திர மதிப்பை, எந்தவொரு சூழ்நிலையிலும் மாதத்திற்கு ரூ.30,000 ஆக நாங்கள் நிர்ணயிக்கிறோம்.
அதுபோன்று சாலை விபத்து வழக்குகளில் ஓராண்டுக்குள் இழப்பீடு குறித்து முடிவெடுத்துஅறிவிக்க வேண்டும்.
அனைத்து நீதிமன்றங்களும் இதில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். குடும்பத் தலைவிகளின் பணி மதிப்பு பொருளாதார ரீதியாக மதிப்பிடப்படாமல், அவர்கள் வேலை செய்யாத பணியாளர்களைப் போலவே பார்க்கப்படுகின்றனர்.
ஒரு குடும்பம் பெருமளவில் இல்லத்தரசிகளின் உழைப்பையும் கவனிப்பையும் சார்ந்திருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டும் உறுப்பினர்களைச் சார்ந்திருப்பவர்களாகவே கருதப்படுகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்தனர்.
