சென்னை ரிப்பன் மாளிகையில் அதிரடி முற்றுகை: 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்! பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Protest

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில் மருத்துவ பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட நிலையில் அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டது. டிஜிட்டல் முறையிலான புதிய செயலி முறையில் வருகைப்பதிவு நடைமுறை வரும் ஜூன் மாதத்திலிருந்துதான் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மே மாதத்திலேயே இந்த புதிய செயலி நடைமுறைப்படுத்தப்பட்டதால், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாகப் பலருடைய வருகைப்பதிவு விடுபட்டுள்ளது.

இந்நிலையில், புதிய செயலி முறையில் வருகைப்பதிவு கணக்கிடப்பட்டு மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட்டதால் பலருக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மருத்துவப் பணியாளர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தத் திடீர் போராட்டத்தின் காரணமாக, சென்னையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு போராடி வருவதால், மாநகராட்சி உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share