தமிழக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிய முதல்வராக விஜய் கடந்த மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத வகையில் மின்வெட்டுப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கடுமையான கோடை வெயில் காரணமாக ஏசி பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் மின் தேவை உயர்ந்துள்ளது. இதனால், பழைய உள்கட்டமைப்பு வசதிகளால் மின் சுமையைத் தாங்க முடியாமல், இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக கூறப்படுகிறது. பல இடங்களில் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த நிலை நீடித்து வரும் சூழலில், நேற்று இரவும் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுகாடு அருகே உள்ள கரிகாட்டுக்குப்பம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியிலும் நேற்று இரவு பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள், நள்ளிரவில் மின்வெட்டைக் கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலும் ஒரு மணி நேரத்திறகு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால் நள்ளிரவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆரணியில், 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததால், அப்பகுதி மக்கள் நள்ளிரவில் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் மின் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. அங்கு மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வழக்கமாக காலை 9 மணிக்குத்தான் மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் நேற்று, உக்கடம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 7:30 மணிக்கே மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் முன்னறிவிப்பின்றி முன்கூட்டியே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தமிழக முதல்வர் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தாலும், உற்பத்தி/பராமரிப்பு பிரச்சினைகள் தொடர்வதால் மின்வெட்டு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளளது.
