ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் சூப்பர் 4-வது சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
17-வது ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று (செப்டம்பர் 21) விளையாடின. ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணியை 2-வது முறையாக பாகிஸ்தான் எதிர்கொண்டது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்தார். டாஸ் வீசப்பட்ட நிகழ்வில், வழக்கம் போல பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகாவுடன், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கை குலுக்காமல் புறக்கணித்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி, ஃபகர் சமாம்- ஃபர்ஹான் ஜோடியுடன் பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டத்தின் பவர் ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். நடப்பு போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் இது. பவர் ப்ளே முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தானின் ஃபர்ஹான், 34 பந்துகளில் அரைசதமடித்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் ஃபர்ஹான் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவின் ஹரித் ஷிவம் துபே 2, குல்தீப் யாதவ் 1, ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் விளையாடினர். இருவரும் பாகிஸ்தான் பந்துகளை அடித்து துவம்சம் செய்து விறுவிறுவென ரன்களைக் குவித்தனர். 31 பந்துகளில் 57 ரன்களை குவித்த அபிஷேக் சர்மா, 28 பந்துகளில் 47 ரன்களைக் குவித்த சுப்மன் கில் இருவரும் அவுட் ஆகினர். இந்திய அனி 10.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ்- திலக் இணைந்தனர். ஆனால் சூர்யகுமார், 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் திலக் வர்மாவுடம் சஞ்சு சாம்சன் இணைந்தார். சஞ்சு சாம்சன் வந்த வேகத்தில் ரன்களைக் குவிக்க முயன்றார். ஆனால் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து திலக் வர்மாவுடன் ஹர்திக் பாண்டியா கை கோர்த்து நிதானமாக ரன்களை எடுத்தனர்.
இந்திய அணி 18.5 ஓவரில் வெற்றி இலக்கான 172 ரன்களைக் கடந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. . இதனையடுத்து பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் மோதிய 2 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியது.
