டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி நேற்று (மார்ச் 24) த்ரில் வெற்றி பெற்றது. Ashutosh Sharma leads Delhi
டெல்லி, லக்னோ அணிகள் மோதிய போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

லக்னோ அணியில் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்க்ரம் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேற, மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 75 ரன்கள் குவித்தார். இதேபோல பூரன் 75 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 209 ரன்கள் குவித்திருந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தனர்.
210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகாத்திருந்தது. ஜேக் ( 1 ரன்) அபிஷேக் போரல் ( 0), சமீர் ரிஸ்வி ( 4 ரன்கள்) ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர். இதனால் வெற்றி காற்று லக்னோ அணி பக்கம் வீசிக்கொண்டிருந்தது.

அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தார். ஆனால், அவரும் 22 ரன்களுடன் வெளியேறினார். இந்த இக்கட்டான நேரத்தில் அஷுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தால் டெல்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 9 விக்கெட்டுகளை டெல்லி இழந்திருந்தது.
மோகித் ஷர்மா, அஷுதோஷ் சர்மா இருவர் மட்டுமே களத்தில் இருந்தனர். இதனால் வெற்றி யாருக்கு என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இந்தசமயத்தில் அஷுதோஷ் சர்மா மூன்றாவது பந்தில் சிக்சர் அடித்தார். இதனால் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. 31 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். Ashutosh Sharma leads Delhi