பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை 14) என்கவுன்டர் செய்தனர்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான 11 பேரையும் ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரையும் தனித்தனியாக அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.30 மணியளவில் ரவுடி திருவேங்கடத்தை ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த மாதவரம் வெஜ்டேரியன் பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற திருவேங்கடத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு திருவேங்கடத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் மீது 3 கொலை உள்பட 11 வழக்குகள் உள்ளது. இவர் ஆட்டோ டிரைவர் போல நடித்து தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங்கை ஃபாலோ செய்து வந்ததாகவும், கூலிப்படைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் மூவ்மெண்டுகள் தொடர்பாக இன்ஃபார்ம் கொடுத்து வந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி திருச்சியில் ரவுடி துரை என்கவுன்டர் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய கைதியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கர்நாடகா: முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் குப்பையில்… கடுப்பான விவசாயிகள்!