உலக குரு அல்ல, உலக ரவுடி!

Published On:

| By Minnambalam Desk

இந்திய கிரிக்கெட் வாரியம் பல விதங்களிலும் உலக ரவுடியாக மாறிவருகிறது

ராமச்சந்திர குஹா

ADVERTISEMENT

நரேந்திர மோடி 2014 மே மாதம் பிரதமரானதிலிருந்து, பாரதிய ஜனதா கட்சியும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கமும் இந்தியாவை “விஸ்வ-குரு”வாக்குவோம் என்று உரக்கப் பிரகடனப்படுத்தி வருகின்றன. உலகின் குருவாக மாறுவதற்காகச் சர்வதேச அரசியலில் இந்தியாவின் முயற்சிகள் தோல்வியடைந்து வந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக உள்ளது. ஆனால் அதன் செயல்கள் கிரிக்கெட்டின் நலனுக்கு உகந்தவையா என்பது கேள்விக்குறி.

2017ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) பொறுப்புணர்வையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவர உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் உறுப்பினராகச் சில மாதங்கள் இருந்தேன். அப்போது, மற்ற அனைத்து கிரிக்கெட் வாரியங்களையும் அடிபணியவைக்கும் ஆசை பிசிசிஐ அதிகாரிகளை ஆட்டிப்படைப்பதைக் கண்கூடாகக் கண்டேன். 

ADVERTISEMENT

ஒரு வரலாற்றாசிரியனாக, வெள்ளை நாடுகளின் ஏகாதிபத்திய ஆணவம் கிரிக்கெட்டுக்கு நன்மை செய்ததில்லை என்பதை நான் அறிவேன். அதே சமயம், இந்தியா அந்த இடத்தை அடையும் முனைப்பைக் குறித்தும் எனக்குக் கவலை ஏற்பட்டது. “இந்தியாவின் ஆதிக்கமும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு எதிராகவே செயல்படும். இந்தியா, சர்வதேச அரசியலில் அமெரிக்கா இருப்பதுபோல, சர்வதேச கிரிக்கெட்டிலும் விதிகளை உருவாக்கும் நாடாக மாறக் கூடாது” என்று எனது சக ஊழியர்களிடம் கூறியதை எனது 2022ஆம் ஆண்டு புத்தகத்தில் பதிவுசெய்திருந்தேன்.

எச்சரிக்கைக் குரல்

ADVERTISEMENT

ரோட் லியாலின் (Rod Lyall) புதிய புத்தகமான தி கிளப்: எம்பையர், பவர் அண்ட் தி கவர்னன்ஸ் ஆஃப் வேர்ல்ட் கிரிக்கெட் என்பதைப் படிக்கும்போது, என்னுடைய (கவனிக்கப்படாத) எச்சரிக்கைகள் நினைவுக்கு வந்தன. 1909இல் ஏகாதிபத்திய சுரங்க அதிபரான ஏப் பெய்லியின் சிந்தையில் உதித்த இம்பீரியல் கிரிக்கெட் கான்பரன்ஸ் (Imperial Cricket Conference) உருவான கதையுடன் புத்தகம் தொடங்குகிறது. அதன் முதல் சில பத்தாண்டுகளில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய வெள்ளை நாடுகள் ஆதிக்கம் செலுத்திவந்தன.

குறிப்பாக இங்கிலாந்து, சர்வதேச ஆட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், புதிய உறுப்பினர்கள் எவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், நாடுகளின் சுற்றுப்பயணங்களும் தொடர்களும் எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும், சட்டங்கள், விதிமுறைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் போன்றவற்றை முடிவுசெய்தது. இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகள் இழிவாகவும் அலட்சியத்துடனும் நடத்தப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஐசிசி ஏகாதிபத்தியப் போக்கும் இனவெறியும் நிறைந்த விளையாட்டு நிர்வாக அமைப்பாகவே இருந்தது. (1946வரையிலும் ஐசிசி கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிசிசிஐ பிரதிநிதி வெள்ளை ஆங்கிலேயராகவே இருந்தார்.)

கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் கொண்டிருந்த ஆதிக்கத்தைக் குறைப்பதற்காக, இந்தியாவும் பாகிஸ்தானும் 1950களிலும் அதற்குப் பிறகும் பெரும்பாலும் இணைந்து செயல்பட்டன. 1965இல், ஐசிசியின் “ஏகாதிபத்தியம்” “சர்வதேசமாக” மாறியது. 2005ஆம் ஆண்டில், ஐசிசியின் தலைமையகம் லண்டனிலிருந்து துபாய்க்கு மாற்றப்பட்டது. இது, “அமைப்பு அதன் புதிய தெற்காசிய சக்தி மையத்திற்கு நெருக்கமாக” வருவதைக் குறித்ததாக ரோட் லியாலின் நூல் குறிப்பிடுகிறது. 

கடந்த பத்தாண்டுகளில், இந்தியா உலக கிரிக்கெட்டை எவ்வாறு ஆதிக்கம் செய்கிறது என்பது குறித்து ரோட் லியாலின் புத்தகம் ஆராய்கிறது. அவரது பார்வையில் சில குறைபாடுகள் இருந்தாலும், பிசிசிஐயின் ஏகாதிபத்திய ஆசைகள் குறித்த அவரது கூற்றுகள் நியாயமானவை. லியாலின் கூற்றுப்படி, பிசிசிஐயின் குறுகிய நலன்களுக்கு அப்பால் பார்க்கத் தயாராக இருந்த ஒரே இந்திய கிரிக்கெட் நிர்வாகி, முன்னாள் பிசிசிஐ தலைவரும் ஐசிசி தலைவருமான ஷஷாங்க் மனோகர்தான்.

மோடி–ஷா யுகத்தில் கிரிக்கெட்

2024 டிசம்பரில், இந்தியாவின் உள்துறை அமைச்சரின் மகன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார். ஜெய் ஷாவின் பதவி உயர்வு குறித்து லியால், “ஐசிசி இப்போது, இந்திய தேசியவாத அரசியல் கட்சியின்  கருவியாக மாறுகிறது. கழுகுகள் உலக கிரிக்கெட்டின் மீது கூடு கட்ட வந்துவிட்டன” என்று எழுதுகிறார். இது துல்லியமான விளக்கம்.

பிசிசிஐ உலகின் கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யும் அபாயம் குறித்து டோனி க்ரெய்க் முன்னறிவிப்பு செய்தார். 2012ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில், கிரிக்கெட் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று, ஐசிசி உறுப்பினர்களிடையே உள்ள சமமற்ற அதிகாரப் பங்கீடு என்று குறிப்பிட்டார். “கிரிக்கெட்டின் முதல் நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டை நிர்வகித்தன. துரதிர்ஷ்டவசமாக, பல சந்தர்ப்பங்களில் சுயநலமே கிரிக்கெட்டின் உணர்வைவிட முக்கியமாக இருந்தது.

இந்தியா போன்ற நாடுகள் பாகுபாட்டுக்கு ஆளாயின” என்று அவர் ஒப்புக்கொண்டார். இப்போது, இந்தியாவின் கட்டுப்பாட்டில் கிரிக்கெட் இருப்பதால், “கிரிக்கெட்டின் உணர்வுக்கு இணங்க இந்தியா நடந்துகொண்டால் கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளும் களையப்படும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தைப் பயன்படுத்தி, ஐசிசியை முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கும்போது, அவரது நம்பிக்கை அதிகப்படியானதாகத் தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் இன்றைய நிலை குறித்த லியாலின் முடிவை மறுப்பது கடினம். “இந்த ஆதிக்கத்திற்குச் சில காரணங்கள் உள்ளன: இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உள்ள பெரும் ஆதரவு, அத்துடன் ஐசிசியின் முதல் 80 ஆண்டுகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அவற்றின் கூட்டாளிகளின் ஆதிக்கம் போன்றவை. இருப்பினும், இந்தக் காரணங்களோ அல்லது தளைகளற்ற இந்திய முதலாளித்துவத்தின் கொடுமையோ கிரிக்கெட்டை ஒரு சில தேசியவாத அரசியல்வாதிகள் மற்றும் பேராசை கொண்ட செல்வந்தர்களால் பணயக்கைதியாக வைத்திருப்பதற்கான நியாயமாகாது.”

சர்வதேச ஆதிக்கத்திற்கான வெறித்தனமான ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பிசிசிஐக்கு ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள சுயநல நிர்வாகிகளும் உதவியுள்ளனர். இந்தப் போக்கு, அது துணைக்கண்டத்தின் மற்ற நாடுகள், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றில் உள்ள கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், நிர்வாகிகளை அந்நியப்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவில் வெளியான ஒரு காணொளியில், ஜெய் ஷா வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணியைவிடவும் கிரிக்கெட்டுக்கு முக்கியமானவராகச் சித்தரிக்கப்பட்டது இதன் விபரீதமான வெளிப்பாடாகும். ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங் போன்ற சிறந்த மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள், இந்தியாவின் புதிய கிரிக்கெட் ஏகாதிபத்தியத்தை நேரடியாகக் கேள்வி கேட்கத் தயங்கவில்லை. உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இதைக் கண்டு வெட்கப்பட வேண்டும்.

ஆதிக்கமும் தரமும்

1909இல் ஐசிசி உருவானதிலிருந்து அது சதித்திட்டங்கள், திறமையின்மையின் கூடாரமாகவே இருந்துள்ளது. இப்போது ஊழலும் தீய எண்ணங்களும் இதில் சேர்ந்துள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது அது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தரக்குறைவான சேவையையே வழங்கியது; இந்த விஷயத்தில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்று தொடர்களிலும் இந்தியா வென்றதில்லை. கோடிக்கணக்கான ரசிகர்கள், பணம், புகழ், பிசிசிஐயின் செல்வம், செல்வந்தர்கள், அரசியல்வாதிகளின் முதலீடுகள் ஆகிய எல்லாம் இருந்தும், இந்திய கிரிக்கெட்டின் தரம் உலக அளவில் சாதாரணமாகவே உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவைவிட நாம் பின்தங்கியே இருக்கிறோம். பொருளாதார வலிமையில் (நிகர உள்நாட்டு உற்பத்திக்குப் பதிலாகத் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மதிப்பிடும்போது) உலக அளவில் நமது தற்போதைய தரவரிசை 137. பாஜக விரும்புவதுபோன்ற “விஸ்வ குரு” அந்தஸ்து தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நாம் உலக குருவாக மட்டுமல்ல; உலக ரவுடியாகவும் இருக்கிறோம். 

ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர். சமகால வரலாறு, கிரிக்கெட் உள்ளிட்டவை குறித்த முக்கியமான நூல்களை எழுதியவர்.

நன்றி: தி டெலிகிராஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share