”மணீஷ் சிசோடியா மட்டுமல்ல, நான் கூட கைது செய்யப்படலாம்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்ததையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) பாஜகவில் சேரச் சொல்லி மணீஷ் சிசோடியா அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்புக்கு அவர் அளித்த பதிலும் பரபரப்பை ஏற்படுத்தின.
துணை முதல்வர் மணீஷ் பதவி விலகக் கோரி, டெல்லியில் பாஜக போராட்டம் நடத்திவருகின்றன. இதனால் ஆம் ஆத்மிக்கும் பிஜேபிக்கும் இடையே மோதல்போக்கு நிலவிவருகிறது.
குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிஜேபி இப்படிச் செயல்படுவதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டிவருகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் இன்று (ஆகஸ்ட் 22) குஜராத் பயணம் மேற்கொண்டனர்.
இன்னும் சில மாதங்களில் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், அங்கேயும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ஆம் ஆத்மி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து இந்த ஒரு மாதத்தில் மட்டும் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு 5வது முறையாக இன்று பயணம் மேற்கொண்டார்.
அப்போது அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “மணீஷ் சிசோடியா அரசுப் பள்ளிகளில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்.
70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை அவர் செய்துள்ளார். இவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி திட்டமும் இவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், இவர் மீது சிபிஐ ரெய்டு நடத்துகிறது.
இதனால் நாட்டிலுள்ள அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இன்னும் 2-3 நாட்களில் சிசோடியா கைது செய்யப்படலாம். யாருக்கு தெரியும்? நான்கூட கைது செய்யப்படலாம். இவையெல்லாம் குஜராத் தேர்தலுக்காக நடக்கிறது.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக அரசின் ஆணவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் மக்களுக்கு தரமான கல்வி மற்றும் சுகாதாரம் வழங்கப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
இன்னும் ஒரு மாநிலம்தான்… தேசிய கட்சி அந்தஸ்து நோக்கி ’ஆம் ஆத்மி’
