1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் கம்பீரமாக போரிட்ட கேப்டன் பல்ராம் சிங் மேத்தா அவர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் பிப்பா.
இந்த படம் கடந்த நவம்பர் 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கி இருந்தார். நடிகர்கள் இஷான் கட்டர், மிருணாள் தாக்கூர், பிரியான்ஷு, சோனி ரஸ்தான், இனாமுல்ஹக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
மேற்குவங்கத்தை சேர்ந்த சுதந்திர கவிஞரான கசி நஸ்ரூல் இஸ்லாம் எழுதிய “Karar Oi Louho Kopat” பாடலை தற்காலத்திற்கு ஏற்றவாறு ஏ.ஆர்.ரகுமான் மறு உருவாக்கம் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது அந்த பாடலை அவர் முறையாக மறு உருவாக்கம் செய்யவில்லை என்று நஸ்ரூலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் ஏ.ஆர்.ரகுமான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து சுதந்திர கவிஞரான கசி நஸ்ரூலின் பேரன் அனிர்பன் கூறியதாவது, “என் தாத்தா 1922 ஆம் ஆண்டு சிறையில் இருந்த போது அந்த பாடல் வரிகளை எழுதினார். 1949 ஆம் ஆண்டு தான் இசை வடிவம் பெற்று அந்த வரிகள் பாடலாக உருவெடுத்தது, இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் சிறப்பாக மறு உருவாக்கம் செய்வார் என்ற நம்பிக்கையில் தான் அந்த பாடலின் உரிமையை அவருக்கு வழங்கினோம். ஆனால் அப்பாடலின் உணர்வையும் இசையையும் ரகுமான் சீர்குலைத்துவிட்டார்” என்று அனிர்பன் குற்றம்சாட்டி உள்ளார்.
அனிர்பன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் இதுவரை ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டு குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
