ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ அதிகாரிகள் இன்று (நவம்பர் 14) மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வாசல் முன்பு அக்டோபர் 25-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அங்கிருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு விரிவான அறிக்கையை அனுப்பியிருந்தார். அதன்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெடிபொருள் தடைச்சட்டம், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை அதிகாரியாக சிபின்ராஜ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!
கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?