டிடிவி தினகரன் இல்லத்தில் அண்ணாமலை ரகசிய சந்திப்பு!

Published On:

| By Minnambalam

annamalai met ttv dhinagaran at hit house

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இல்லத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 21) ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதனையடுத்து ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அந்த கூட்டணியில் இருந்து விலகினார்கள்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், “பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. எங்களை கூட்டணிக்குள் அண்ணாமலை தான் கொண்டு வந்தார். என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர். தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம். பன்னீர்செல்வம் விஷயத்தில் நயினாரின் செயல்பாடு எனக்கு மன வருத்தத்தை அளித்தது. NDA கூட்டணியில் அதிமுக வந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் இந்த முடிவை எடுத்தோம். கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் தான். வெற்றிபெறும் கூட்டணியில் நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்று பேசியிருந்தார்.

ADVERTISEMENT

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் டிடிவி. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ’டிடிவி தினகரனுடன் தொலைபேசி மூலமாக பேசி வருகிறேன். நட்பு ரீதியாக விரைவில் அவரை சந்திப்பேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது பாதுகாப்பு போலீசார் மற்றும் வாகனத்தை தவிர்த்து விட்டு, மாற்று காரில் அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்திற்கு நேற்று மாலை சென்று சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

இரவு 7.15 மணி முதல் 9 மணி வரை வரை சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், டிடிவி தினகரனை என்.டி.ஏ கூட்டணியில் தொடர்ந்து இருக்கும்படி அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அப்போது முதல்வர் வேட்பாளர் யார் என தினகரன் கேட்டபோது, “விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அதையெல்லாம் அப்போது பேசிக் கொள்வோம்” என அண்ணாமலை பதிலளித்து அங்கிருந்து விடைபெற்றார்.

இரவு உணவும் டிடிவி தினகரன் வீட்டிலேயே அருந்தியுள்ளார் அண்ணாமலை.

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share