அன்புதானே எல்லாம்… ராமதாசுக்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் குரல்! பாமகவில் பிளவா?

Published On:

| By Aara

பாமகவின் தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி, இனி செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்றும், இனி நானே பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும் டாக்டர் ராமதாஸ், இன்று (ஏப்ரல் 10) தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இது பாமகவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தனை நியமித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால், அதை அன்புமணி எதிர்த்தார். அப்போது, ‘இது என் கட்சி… இங்கே நான் எடுப்பதுதான் முடிவு’ என்று மேடையிலேயே அறிவித்தார் ராமதாஸ். Anbumani supporters against Ramadoss split in PMK

அதன் பிறகு அன்புமணி மேடையில் எழுந்து, ‘இனி என்னை சந்திக்க வருகிறவர்கள் பனையூரில் இல்லத்துக்கு வரலாம்’ என்று அறிவித்தார். அதன் பின் தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார் அன்புமணி.

இந்த நிலையில் சித்திரை முழு நிலவு மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டங்களிலும் ராமதாஸ் தலைமையில் கலந்துகொண்டார் அன்புமணி.

இந்நிலையில்தான் இன்று இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். மேலும் இதற்குப் பின்னால் சொல்ல முடியாத காரணங்களும் இருக்கின்றன என கூறியுள்ளார்.

இதுவரைக்கும் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் யார் பக்கம் இருக்கிறோம் என பாமக நிர்வாகிகள் ஒரு நிலைப்பாடு எடுத்து அறிவித்ததில்லை.

ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு பாமக பொருளாளர் திலகபாமா, பகிரங்கமாக ராமதாஸுக்கு எதிர்ப்பும் அன்புமணிக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார். Anbumani supporters against Ramadoss split in PMK

இன்று அவர் வெளியிட்ட சமூக தளப் பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான்.ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்” என குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸின் முடிவை உட்கட்சிக்குள் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என கட்சியின் பொருளாளர் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் மிகுந்ததாகிறது. அவரைத் தொடர்ந்து பாமக நிர்வாகிகள் பலரும் அன்புமணிக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் அன்புதானே எல்லாம் என்ற வாசகத்தை வைத்து தொடர் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் டாக்டர் அன்புமணி இதுவரை தனது கருத்தை வெளிப்படுத்தவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share