காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி: அன்புமணி வலியுறுத்தல்!

Published On:

| By Selvam

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் தங்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி  பல்கலைக்கழக ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவம்பர் 26) வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், அவர்களின் வாழ்விணையர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

கல்வி வளர்ச்சியையே நோக்கமாக கொண்ட காமராசர் அவர்களால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.

ஓய்வூதியம் உரிய காலத்தில் கிடைக்காததால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பல நேரங்களில் தங்களுக்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், மருந்து, மாத்திரைகளை வாங்கவும் கூட பணம் இல்லாமல் தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்துகின்றன.

ADVERTISEMENT

காமராசர் பல்கலைக்கழகத்திற்கு 35 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு, உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்குவது தான் அவர்களுக்கு செய்யப்படும் நன்றிக்கடனா? காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என சுமார் 1,000 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க மாதம் ரூ.10.50 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்ய முடியாதது தான் இந்த நிலைக்கு காரணம்.

பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த காலங்களில் நிதியை கையாண்ட முறைகள் குறித்து ஆய்வு செய்த தணிக்கை அமைப்புகள், ஒட்டுமொத்தமாக 5 தணிக்கை ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன. அவற்றுக்கு பல்கலைக்கழகம் சரியான விளக்கம் அளிக்காததால் அரசு நிதி அளிக்கவில்லை. இதே நிலை தொடரக்கூடாது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேவையான அளவு நிதியை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்!

காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் பலியான புலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share