தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (நவ. 10) தீர்ப்பளிக்க உள்ளது.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்பட்டார்.
முன்ஜாமீன் மறுப்பு.. அக். 26-ல் கைது
இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அக். 26-ந் தேதி முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்பில் மகேஷ் தரப்பு வாதம் என்ன?
சிறையில் உள்ள அன்பில் மகேஷ், ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி விசாரித்தார். அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், இந்த வழக்கில் தனது கட்சிக்காரருக்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் இல்லை என்று வாதிட்டார். முதலில் ரூ.100 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகார், பின்னர் ரூ.400 கோடி, ரூ.600 கோடி, ரூ.800 கோடி என்று மாறிக்கொண்டே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பணம் கொடுத்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அன்பில் மகேஷின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதால் அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பில்லை என்றும் வாதிட்டார். மேலும், அன்பில் மகேஷ் தலைமறைவாக மாட்டார் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜாமீனுக்கு போலீஸ் எதிர்ப்பு ஏன்?
அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார், அரசகுமார் ஆகியோருடன் அன்பில் மகேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
முத்துக்குமார் வசூலித்த பணத்தை சரவணன் என்பவர் அன்பில் மகேஷின் வீட்டுக்குக் கொண்டு சென்றதாகவும், இதற்கான வீடியோ ஆதாரம் போலீசாரிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அன்பில் மகேஷிடம் ஏற்கெனவே 3 நாட்கள் நடத்திய போலீஸ் காவல் விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.
இன்று தீர்ப்பு
அன்பில் மகேஷ் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் நவ. 5-ந் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவ. 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். அன்பில் மகேஷுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்றைய தீர்ப்பில் தெரிய வரும்.









