அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில், பாஜகவுக்கு -27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இன்று (மார்ச் 23) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், “11 தொகுதிகளிலும் அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடும். கொடுப்பட்ட தொகுதிகளில் நாங்கள் கேட்டதில் 99.5% தொகுதிகள் கிடைத்துள்ளன. நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் கேட்ட எல்லா தொகுதிகளையும் கொடுக்க முடியாது. தொகுதி பெயர்கள் வெளி வரும் போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க நாங்கள் கூட்டாகச் சேர்ந்து உழைப்போம்.
தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடித்துக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்றார்.
முன்னதாக அமமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
